பக்கம்:அருமையான துணை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அருமையான துணை

தெருவைக் கடந்து திரும்பி மறைகிறவரை துரத்திச் சென்று, அதை விரட்டிவிட்டோம் என்ற திருப்தியோடு அந்த நாய் தனது இடத்துக்கு வந்து நிம்மதியாகப் படுக்கும்.

ஒருதரம் அது செந்தியின் சைக்கிளை துரத்தியது. அவன் வேகமாய் மிதிக்க, நாயும் பாய்ந்து பாய்ந்து குரைத்தது. அப்படித் தாவிக் குதித்துக் குரைத்த நாயின் பற்களில் இரண்டு செந்தியின் பாதத்தில் லேசாகப் பதிந்தன. அவன் பதறிப் பயந்துபோனான்.

'நாயின் பல் பட்டுவிட்டதே. இது நிஜமான கடிதானா? இப்படி லேசாகப் பட்டாலே விஷம்தானா?’ என்றெல்லாம் செந்தி குழம்பித் தவித்தான். பலபேரிடமும் விசாரித்தான். நாயின் பல் பட்ட இடத்தில் முதலில் சுண்ணாம்பைத் தடவினான். பிறகு அவரும் இவரும் சொன்னார் என்று எதை எதையோ தடவி வைத்தான். நல்ல வேளேயாக ஒன்றும் பண்ணவில்லை.

என்றாலும் அந்தக் கறுப்பு நாயை நினைத்தாலே செந்தியின் உள்ளமும் உடலும் பதறுவது தவிர்க்க இயலாதது ஆகி விட்டது. அந்த நாயின் கண்களில் படாமலே வர அவன் பெருமுயற்சிகள் செய்வதும் இயல்பாயிற்று.

தெருமூலையில் வரும்பொழுதே கறுப்பு நாய் திண்ணையில் கிடக்கிறதா என்று அவன் பார்வை துழாவும். நிலாக் காலம் என்றால்-அல்லது அந்த வீட்டின் வாசல் விளக்கு எரிந்து கொண்டிருந்தால்-நாய் கிடப்பது தெரியும். முன்னிருட்டுக் காலத்திலும், விளக்கு இல்லாத நாட்களிலும், நிச்சயமாகச் சொல்ல முடியாது.

அத்தகைய இரவுகளில் செந்தி, எதுக்கு வீண் ஆபத்து என்று எண்ணி, வடக்குத் தெரு வழியே திரும்பி, நடுத்தெரு வந்து சுற்றி, தன் வீடு இருக்கிற குறுக்குத் தெரு சேருவான். வீண் சுற்றுத்தான். அதற்கு என்ன செய்வது? கரிமுடிந்து போகிற அந்தக் கறுப்பு நாய் சைக்கிள் பின்னே ஓடி வந்து, காலைக் கல்விப்பற்றி, கடித்துக் குதறிவிட்டால் நாய்க்கடி ரொம்ப மோசமான விஷயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/113&oldid=1306767" இலிருந்து மீள்விக்கப்பட்டது