பக்கம்:அருமையான துணை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நஷ்டமே லாபம்

3

அவன் தயங்கினன். சிறிது குழம்பினான். பிறகு அவனுக்கே உரிய இயல்பான துணிச்சலோடு சொன்னான்:

'கருவண்டுக் கண்கள் சுழலுது. குமிழ் மூக்கு இருக்கு, கண்ணாடிக் கன்னங்களும், பிறை நிலவு நெற்றியும், பழச்சுளை உதடுகளும் இருக்கு எல்லாவற்றிலும் அழகு கொஞ்சுது சிரிக்குது!.'

அவளுக்கு வெட்கமாவது வெட்கம்! இருந்தாலும், அந்தப் பேச்சு அவளுக்கு இனித்தது என்பதை அவள் அங்கிருந்து திரும்பி ஓடாதது எடுத்துக் காட்டியது: முகத்தில் பூத்த செம்மையினூடே மலர்ந்த புன்சிரிப்பு சுட்டியது. தலை கவிழ்ந்த நிலையில் அவள் ஏவிய ஒரக் கண் பார்வை விளக்கியது.

"இதை விசாரிக்கத்தான் நீ இங்கே வந்தாயா?" என்று கேட்டான் அவன்.

"நீங்கள் கதை எழுதுகிறவரா?" என்று அவளும் ஒரு கேள்வியையே உதிர்த்தாள்.

"இல்லை. ரசிகன் நான்!”

"பத்திரிகை ஆபீசில் எதிலாவது வேலை பார்க்கிறீர்களா?”

"ஊகுங். ஒரு லைபிரரியில்!”

"அப்போ, எனக்குப் படிப்பதற்கு நிறையப் புத்தகம் தரனும் நீங்க."

"அழகை ரசிப்பதற்குக் கட்டணமா, காணிக்கையா?"

அவள் சிரித்தாள். அது செஞ்சொல் கவிதையாக ஒலித்தது அவன் காதுகளில்.

பொழுது போகல்லே, போரடிக்குது. கதைப் புத்தகம் ஏதாவது வாங்கிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். நீங்க நிறையப் புத்தகங்கள் வச்சிருக்கீங்க. எப்ப பார்த்தாலும் படிச்சுக்கிட்டே இருக்கீங்க. அதனாலே உங்களிடமிருந்து. ...” அவள் இழுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/12&oldid=970558" இலிருந்து மீள்விக்கப்பட்டது