பக்கம்:அருமையான துணை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அருமையான துணை

 இன்பக் கதைகள் கொண்ட இரண்டு புத்தகங்களை அவன் கொடுத்தான்.

விரைவிலேயே, ‘இன்பக் கதைகள் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ, கண்ணம்மா!' என்ற வரியை ‘வசந்தா!' என்று மாற்றி அவளிடமே சொல்லவேண்டிய நிலைமை அவனுக்கு ஏற்பட்டுவிட்டது.

அவள் பள்ளிக்கூடம் போகாத நேரங்களில் எல்லாம் அங்கேயே இருந்தாள். "பாடத்தில் சந்தேகம் கேட்க வந்தேன்" என்று சொல்லிக்கொண்டு வருவாள். பள்ளிப் பாடம் படிப்பது தவிர, எல்லாவற்றையும் செய்வாள். அர்த்தம் உள்ளனவும், இல்லாதனவும், சுவை உடையனவும் அல்லாதனவும் ஆக என்னென்னவற்றையோ பேசுவாள். அவன் சொல்வதிலேயே தனிச்சுவை இருந்தது அவனுக்கு.

அவள் வரும்போது அவன் படித்துக்கொண்டிருந்தால், ‘சும்மா என்ன படிப்பு!' என்று புத்தகத்தைப் பிடுங்கி வைத்துவிட்டு, ‘நான் வருவதைக் கண்ட உடனேயே புத்தகத்தை மூடி வைக்கவேண்டாம்?' என்று செல்லமாக அதட்டுவாள். சிரிப்பாள்.

சிரிக்காமல் இருக்க முடியாது அவளால். களங்கமிலாச் சிரிப்பை அள்ளிச் சிதறும் ஆனந்த ஊற்று அவள். ஆடாமல் அசையாமல், குதிக்காமல், துள்ளாமல் ஓடாமல் ஒரே இடத்தில் அவளால் அமைதியாக இருக்க முடியாது. உணர்வு துளும்பும் உயிர்க் கவிதை அவள்.

அவள் சுபாவங்கள் அனைத்தையும் அவன் ரசித்து மகிழ்த் தான். அவள் விளையாட்டுப் பேச்சும் சிரிப்பும் அவனுக்கும் பிடித்திருந்தன.

அந்த அறையில் உள்ள ஒவ்வொன்றையும் அவள் துழாவி ஆராய்ந்து விடுவாள். அப்படி டப்பாவைத் பார்த்தவள், ‘ஐயே, நீங்க என்ன சின்னப் பிள்ளையா!' என்றாள். அதனுள்ளிருந்த மிட்டாய்களில் ஒன்றை எடுத்து, கண்ணாடித் தாளை உரித்துவிட்டு, வாயிலிட்டுச் சுவைத்தாள். ‘அய், நல்லாருக்கு!' என்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/13&oldid=970559" இலிருந்து மீள்விக்கப்பட்டது