பக்கம்:அருமையான துணை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நஷ்டமே லாபம்

3

‘நான்தான் சொன்னேனே! நான் ரசிகன். இனிய விஷயங்களை ரசிப்பதற்கு வயது குறுக்கே நிற்காது. மனம் தான் வேண்டும்' என்றான் ராஜாகிருஷ்ணன்.

வசந்தாவின் பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர், அவள் எந்நேரமும் அவன் அறையிலேயே காணப்பட்டாள்--சாப்பிடும் நேரங்களிலும், இரவு தூங்கும் நேரமும் தவிர. எப்போதும் சிரிப்பு, ஓயாத பேச்சு. எப்பவாவது பத்திரிகைகள், புத்தகங்களில் ஈடுபடுவதும் உண்டு. அவனுக்கு இனிப்புகள் பிடிக்கும் என்றால், அவனைவிட அதிகமாகவே அவை அவளுக்குப் பிடித்திருந்தன. அவன் ஆரம்பத்தில் அன்பளிப்பாக சில சில ‘ஸ்வீட்'கள் வாங்கிக் கொடுத்து வழி காட்டவும், அவள் உரிமையோடு ‘ஜாங்கிரி வேண்டும் இன்று பாதாம் அல்வா ரசமஞ்சரி வாங்கி வாங்களேன்' ‘பெங்கால் ஸ்வீட் காஷ்மீர் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இன்று அதையே வாங்குங்கள்' என்று ‘டைரக்ட் செய்த' விரும்பியதைப் பெற்று மகிழ்ந்தாள். அவள் விருப்பங்களும் கோரிக்கைகளும் அவனுக்கு வெறுப்பு ஏற்படுத்தவில்லை. மகிழ்வுடன் வாங்கித் தந்தான். அவளது அந்நேரத்திய மனநிறைவை, முகமலர்ச்சியை, ஆனந்தக் களிப்பைக் கண்டு, மனம் மகிழ்வது அவன் இயல்பாகி விட்டது.

இவ்விதம் ஒடின வருடங்கள்.

அவள் அவனைத் தன்னுடன் இணைத்தே பேசிக் களித்தாள். "நம்ம வீடு" என்றே அறையைக் குறிப்பிட்டாள். ‘நமக்கு நிறைய பணம் கிடைத்தால் நாம் என்னென்ன வாங்கலாம், என்ன செய்யலாம், எங்கே போகலாம்' என்றெல்லாம் ஆசைக் கோட்டைகள் கட்டுவாள்.

அழகான ஸாரிகள், ஜாக்கெட்டுகள், புது டிசைன் நகைகள், அடிக்கடி சினிமா பார்ப்பது, ஓட்டல்களில் விதம் விதமான தின்பண்டங்களையும் டிபன் தினுசுகளையும் வயிறாற, மனமாற தின்பது-அவள் விழிப்பு நிலையில் அளக்கும் கனவுகளில் இவை எல்லாம் அதிகம் இடம்பெறும். அனைத்தும் அவன் துணையோடு நடப்பதாகத்தான் அவள் சித்தரித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/14&oldid=970561" இலிருந்து மீள்விக்கப்பட்டது