பக்கம்:அருமையான துணை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருமையான துணை

8


‘அடடே, வசந்தாவா!' உண்மையான ஆச்சரியத்தோடு கவிஞன் அவன்.

-எப்படி இருந்தவள் என்னமாய் மாறிப்போனாள்! ஆளே அடையாளம் தெரியாதபடி! மித மிஞ்சிய தீவனமும் சுகவாழ்வும் ஆளைக் கெடுக்கும் என்பது சரிதான்!

‘என்ன இப்படி அடையாளமே தெரியாதபடி ரொம்ப மெலிஞ்சுபோயிருக்கீங்க?' என்று கேட்டாள் வசந்தா. ‘நலம்தானே? நல்லா இருக்கீங்களா?'

‘ஆமா ஆமா' என்றான் அவன். ‘செளக்கியம் தானே?'

அதுதான் ஆளப் பார்த்தாலே தெரியலியா என்றது அவன் மனம்.

என் வசந்தா-என் நினைவில், உள்ளத்தில், பசுமையாக விளையாடுகிற பெண் வேறு, இத்தடிச்சி வேறு என்று பேசியது அது.

‘நேரமாகுது. பிக்சருக்குப் போகிறேன். அந்தப் பக்கமே நீங்க வர்றது இல்லே போலிருக்கு. ஒரு நாள் வாங்களேன்' என்று சொல்விவிட்டு, அவளுக்காகக் காத்து நின்ற அம்மாளோடு சேர்ந்து போனாள் அவள்.

‘தொலை...தொலைஞ்சு போ!’ என்றது அவன் மனம்.

அவனை அறியாமலே அவனுள் ஒரு ஆனந்தம் குமிழியிட்டுக் கொப்புளித்துப் பொங்கியது; புரண்டு ஒடியது; அவனுள் எங்கும் பரவி, அவனை நனைத்து உவகைப் பெருக்கில் குளிப்பாட்டியது.

--ஆடும் கவிதையாய், அசையும் ஓவியமாய், இனிய கலையாக விளங்கிய என் வசந்தா கால வேகத்தில் இப்படி மாற முடித்திருக்கிறது என்றால்! என்னோடு சேர்ந்திருந்தாலும் இப்படித்தான் ஆகியிருப்பாள். ஸ்வீட் வேணும், அது வேணும், இது வேணும் என்று கேட்டு வாங்கித் தின்று... எப்படியும் போகட்டும்! ஆளைக் கெடுத்துவிட்டாளே! இவள் என் வாழ்வில் வந்து சேராமல் போனதே நல்லதுதான். வசந்தா என் துணைவி ஆகி, இப்படிக் குண்டம்மாளாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/17&oldid=970562" இலிருந்து மீள்விக்கப்பட்டது