பக்கம்:அருமையான துணை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அருமையான துணை

அதில் கிடைக்கும் கமிஷனைக் கொண்டு, பிழைப்பு நடத்தியாக வேண்டிய நிலையிலிருந்த அச்சிறுவனுக்காக அவன் இரக்கப்படாத நாளே கிடையாது. அந்த இரக்கத்தினால் அவ்வப்போது அந்தப் பையனிடம் பத்துப் பைசாவுக்கோ இருபது பைசாவுக்கோ ஐஸ் வாங்கி, தனக்கு ஐஸ் பிடிக்காது, தேவையும் இல்லை என்பதனால் அதை ரோட்டின் மீது சிறி அடித்து அது துகள் துகளாகச் சிதறித் தெறிப்பதைக் கண்டு ரசித்திருக்கிறான். சில சமயம் ஐஸ்-பால் ஜஸ், என்ற குரல் கேட்டு, வாங்கித்தின்ன ஆசை இருந்தும் வசதி இல்லாததனால் அந்தப் பையனையே ஏக்கத்துடன் பார்த்து நிற்கும் யாராவது சிறுவன் அல்லது சிறுமிக்கு, அவன் வாங்கியதை கொடுத்துவிடுவதும் உண்டு. அப்போது ஆசை எதிர்பாராது நிறைவேறப்பெற்ற சிறுவன் அல்லது சிறுமியின் முகத்தில் புது உதயமாய் ஒளிவீசும் மகிழ்ச்சி அவன் உள்ளத்தில் சேர்க்கும் ஆனந்த நிறைவு அவனே கிறுகிறுக்க வைக்கும்.

மழை பெய்யும் வேளையில், ஐஸ் பையனுக்கு உதவி தேவைப்படுகிறபோது தன்னால் சிறு உதவியும் செய்ய இயலவில்லையே -ஐஸ் வாங்கி உதவத் தன் கையில் பத்துப் பைசா கூட இல்லையே-என்ற உணர்வு அவன் வேதனைச் கமையில் பளு அதிகம் சேர்த்தது. துயரம் அவன் தொண்டையை அடைத்தது. நெஞ்சில் வலித்தது. கண்களில் நீர் வடிந்தது. இப்படி. எத்தனையோ சந்தர்ப்பங்கள்! அவனை அறிந்தவர்கள் கூட, அவன் வாய் மூலமாக அவனது இதய வேதனையைக் கேட்டறிந்தால், 'என்ன பைத்தியக்காரத்தனம் இது?' என்று எள்ளிச் சிரிக்கும்படி செய்கிற விஷயங்கள்...

அவன் வீட்டின் முன்னே உள்ள தெரு வழியாகத்தான் மயானத்துக்குப் பிணங்கள் எடுத்துச் செல்லப்படும். அப்படிச் செல்கிறவற்றின் இறுதி யாத்திரையில்தான் எத்தனை ஏற்றத் தாழ்வுகள்! கொட்டு முழக்கமும் பூ அலங்காரமும் ஆட்டபாட்டமுமாய்ச் செல்லும் ஊர்வலம். இறத்தவனின் அந்தஸ்தையும் செல்வாக்கையும் காட்டும் விதத்தில் பலரகமான மனிதர்கள் கும்பலாகத் திரண்டுவர,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/21&oldid=966782" இலிருந்து மீள்விக்கப்பட்டது