பக்கம்:அருமையான துணை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுதாபம்

13

மெதுவாக நகர்ந்துசெல்லும் ஊர்வலம். சுமாரான கூட்டத்தோடு போகும் சராசரி ஊர்வலங்கள்-

அவற்றை எல்லாம் கண்டிருந்த அவன் ஒருசமயம் ஒரு பிணத்தின் பயணத்தைக் காண நேரிட்டது. கொட்டு முழக்கு, சேகண்டி ஒலி எதுவும் கிடையாது. பூ அலங்காரம், தடபுடல்கள் இல்லவே இல்லை. முன்னும் பின்னும் மவுனமாக நடந்து வரும் ஆட்களும் இல்லை. பாடையைச் சுமந்து செல்லும் நாலுபேர். கொள்ளிச்சட்டி தாங்கி நடக்கும் ஒருவன். வெறும் மூங்கில் பாடையில் பரிதாபமாய் கிடந்த பிணம். அவ்வளவுதான். 'அன்வெப்ட், அன் ஆனர்ட் அண்ட் அன்ஸங்' என்கிற மாதிரி, துக்கம் கொண்டாட எவரும் இன்றி, நேற்றுவரை இருந்தவனின் நினைவை கெளரவிக்கும் பெருமைச் சின்னங்கள் எதுவும் இல்லாமல், அவன் சிறப்பைப் புகழவோ அவன் இழப்பை எண்ணி அழவோ யாரும் இராது, வாழ்வின் வெறுமையை எடுத்துக் காட்டுவது போல் சென்றுகொண்டிருந்த அந்தப் பிணத்தைப் பார்த்து, அதனுடைய அவலநிலைக்காக அவன் மனம் இரங்கி அழுதது.

ஒரு சந்தர்ப்பத்தில் அவன் ஆஸ்பத்திரிக்குப் போனான். அங்கே ஒவ்வொரு பகுதியிலும் நோயாளிகளாய்க் காத்து நின்றவர்களைப் பார்த்ததும் அவனுக்கு என்னவோபோல் ஆயிற்று. கண் நோவினாலும் காது உபத்திரவங்களாலும், சரும வியாதிகளாலும், இன்னும் மனித உடலில் ஏற்படக்கூடிய என்னென்னவோ சீக்குகளாலும் சிரமப்பட்டுக்கொண்டு, சீட்டு வாங்கக் காத்து நின்று, பிறகு உரிய பகுதியில் டாக்டரைக் காணக் காத்து நின்று, பின்னர் பதிவு செய்துகொள்ளும் இடத்திலும், அப்புறம் மருந்துகள் வாங்குமிடத்திலும் காத்து நின்று அவதிப்படுவதைக் கண்டதும், அவன் அவர்கள் எல்லோருக்குமாகவும் அனுதாபம் கொண்டான்.

மழை பெய்கிற நாட்களில், மழையில் நனைகிறவர்களுக் காகவும், ரோடுகளின் ஒரங்களில் நடைபாதைகளில், குடியிருந்து மழைத்தொல்லையால் கஷ்டப்படும் மனிதர்களுக்காகவும் அவன் மனவேதனை அடைவது போலவே வெயிலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/22&oldid=966783" இலிருந்து மீள்விக்கப்பட்டது