பக்கம்:அருமையான துணை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அருமையான துணை

வெளிச்சம் போட்டுவிட்டு, அவர் கதையை முடித்துக் கொண்டு போய்விட்டார். அப்போது சொக்கையாவுக்குப் பத்து அல்லது பதினோறு வ்யது இருக்கும், அவன் தாய் விசாலாட்சி அம்மாள், சொந்தக்காரர்கள் குற்றம் குறை சொல்லக்கூடாது என்பதற்காகவும், ஊர் மெச்சவேண்டும் என்றும், ‘போய்ச் சேர்ந்தவுக நல்லகதி பெறவேண்டுமே' என்ற எண்ணத்தோடும் ஏக அமர்க்களமாக எழவு கொண்டாடினாள். கடன் வாங்கித்தான். பின்னே பணம் ஏது?.

‘செய்யும் கட்டைச் செய்தே தீரணும்‘ என்று பிடிவாதமாக, பதினாறாம் நாள் விசேஷத்தின்போது ஐயர்கள் பலருக்கு அள்ளி வழங்கினாள். மாதம்தோறும் ‘திதிகொடுக்கிறேன்' என்றும், ஒரு வருஷம் நிறைவுற்றதும் ‘முதல் திவசம்' என்றும் தாராளமாகவே செலவு செய்தாள்.

அப்புறம் ஏறிவிட்ட கடன்களைத் தீர்ப்பதற்காக இருந்த ஒரு வயலை விற்றாள் அந்த அம்மாள். ‘மண்ணை ஆளக் கண்டது யாரு என்கிறாப்போலே, சொத்து இன்னைக்கு ஒருத்தன் கையிலே! சீதேவி ஒரே இடத்திலே நிலைச்சு நிற்கமாட்டா. இப்ப வயலு போயிட்டா என்ன? சொக்கையா படிச்சு, சம்பாத்தியம்பண்ண ஆரம்பிச்சிட்டான்னு சொன்னா, இந்த வீட்டுச் சோத்தை நாயும் தின்னு, பேயும் விளையாடும்’ என்று பெருமையாகப் பேசுவாள். அந்த ஊர்க் காரர்களுக்கே இப்படி எல்லாம் பேசும் வாக்கு சாதுர்யம் இயல்பாக அமைந்திருந்தது.

இதெல்லாம் சொக்கலிங்கத்துக்கு வெறுப்பு அளித்த விஷயங்கள். வாழ்க்கை கட்டாயத் தேவை ஆக்கிவிட்ட சிக்கனத்தில் ஊறி வளர்ந்தவன் அவன். ‘கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை’ எனும் ஞான உரையை ஒவ்வொரு நாளும் அனுபவபூர்வமாக உணர்ந்து பெரியவன் ஆனவன், அதனால் மத்தியதர வர்க்கத்துக் குடும்பங்களில் காணப்படுகிற போலித்தனங் களையும் பொய்ப் பெருமைகளையும் ஒதுக்கிவிடக் கற்றுக் கொண்டவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/35&oldid=970611" இலிருந்து மீள்விக்கப்பட்டது