பக்கம்:அருமையான துணை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணைந்த பெருமாளின் மனமகிழ்ச்சி



ப்பாவித் தோற்றமுடைய அணஞ்ச பெருமான் உண்மையில் ஒரு ரசமான பேர்வழி என்பது அவனோடு பேசிப் பழகினால் தான் தெரியும்.

அணஞ்ச பெருமாள் சிறுவர்களாலும் வேறு சிலராலும் ’டிம் அடிச்ச பெருமாள்’ ’ஒளிபோன பெருமாள்”, என்றெல்லாம் அவனது பெயர் காரணமாக பரிகசிக்கப்படுவது வழக்கம்.

அவன் பிறந்து வளர்ந்த ஊரில் கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் சிவன் அணைந்த பெருமாள் என்பதாம். அதனால் அவ்வூரில் அவ்வப்போது சிலருக்கு அந்தப் பெயர் சூட்டப்படுவது உண்டு. அது நீளமாக இருக்கிறது என்று அணைந்த பெருமாள் எனச் சுருக்கப்படுவதும், பேச்சு வழக்கில் அணஞ்ச பெருமாள் என்று சிதைந்து போவதும் தவிர்க்க முடியாத நியதிகளாக அமைந்துவிட்டன.

வளர்ச்சி குன்றிய உருவம், குள்ளம், ஒல்லி, கறுப்பு திறம்.முகத்தோற்றமும் வசீகரமானதாக இல்லை.சிறப்பாக எடுத்துக்காட்டக்கூடிய செயலாற்றல் எதையும் அவன் பெற்றிருக்கவுமில்லை. அவனுக்கு வயது முப்பது இருக்கலாம். கல்யாணமாகியிருந்தது.தனிக்குடித்தனம் தான்.வருமானம் என்று ஏதோ கொஞ்சம் வருவதற்கு வழி இருந்தது. தாராளமாகச் செலவு செய்து, இஷ்டப்பட்டவைகளை வாங்கி, விரும்பியவற்றை நினைத்தபோது செய்து சாப்பிட்டு, உல்லாசமாக உடுத்து, எடுப்பாக ஊரிலே அலைந்து திரிவதற்கு அந்த வருமானம் உதவும் அளவில் இல்லை.

என்றாலும், அணஞ்ச பெருமாள் ‘அங்கிங் கெனாதபடி எங்கும்’ காணப்பட்டான். பொழுது போகவேண்டுமே!

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/42&oldid=1243037" இலிருந்து மீள்விக்கப்பட்டது