பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது








ஐம்பது ஆண்டுகட்கு முன்பு ஈரோட்டிலே பெரியார் குடியரசுப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். அப்பத்திரிகையில் மாதம் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அச்சுத் திருத்தராகப் (Proof reader) பணிபுரிந்து வந்தார். சென்னை எஸ்.எஸ். வாசன் குடியரசுப் பத்திரிகையின் விளம்பர முகவராக (Publicity Agent) இருந்தார். நான் சுயமரியாதை இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தேன். பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பும்பாடல்களுக்கு முதன்மை கொடுத்துக் குடியரசில் அடிக்கடி வெளியிட்டு வந்தோம். பாவேந்தர் பாரதிதாசன் அப்போது அடிக்கடி ஈரோடு குடியரசு அலுவலகத்துக்கு வருவார்.

'பாரதிதாசன் கவிதைகள்’ எனும் பெயரால் அவரது கவிதைகளிற் சிலவற்றைத் திரட்டி வெளியிடும் முதல் முயற்சியில் பங்கு பெற்றவன் நான் என எண்ணும் பொழுது என் உள்ளம் மகிழ்ச்சி அடைகின்றது. அதை விட அதிக மகிழ்ச்சி உண்டாகிறது, அம் முதல் நூலுக்கு முன்னுரை வழங்கியதை எண்ணும்பொழுது. 'கதைக்காக ஒருமுறை, கவிதைக்காக ஒரு முறை, கருத்திற்காக ஒரு முறை, கொள்கைக்காக ஒருமுறை, உணர்ச்சிக்காக ஒரு முறை, இனிமைக்காக ஒருமுறை, எழிலுக்காக ஒருமுறை படித்தேன். ஒவ்வொருமுறையும், ஒவ்வொரு கவிதையும் ஒரு படித் தேனாகவே ருசித்தது’ என்பதே அம்முன்னுரை. இந்நூல் நாட்டில் நல்ல பயனை விளைவித்தது.