பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/94


29-7-46 இல் நானும், அன்பர் திரு. சி.என். அண்ணாத்துரை அவர்களும் சேர்ந்து நாவலர் சோமசுந்தர பாரதி யார் தலைமையில் சென்னைப் பச்சையப்பர் பள்ளித் திடலில் பாவேந்தருக்கு ரூ.25,000 கொண்ட பொற்கிழி வழங்கினோம். பாவேந்தர் முன் கோபக்காரர். அதனால் பலரைப் பகைத்துக் கொண்டார் 'தமிழியக்கம் பாடி விட்டுத் திராவிட இயக்கப் பாடல்கள் ஏன் எழுதினீர்?' என்று நான் கேட்டேன். அதனால் என்மீதும் அவருக்குக் கோபம்.

1952ஆம் ஆண்டு அவருக்கு மணிவிழா எடுப்பதற்காகத் திருச்சியில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அமைப்புக் குழுவின் பொறுப்பாளராக நான் இருக்கவேண்டும் என்று கவிஞர் விரும்பினார். திருவாளர்கள் மதுரை முத்து, அன்பில் தர்மலிங்கம், புத்தனேரி சுப்பிரமணியம், திருலோக சீதாராம், நாகசுந்தரம், அரு. ராமநாதன் முதலியோர் அக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். இம்மணி விழா அமைப்புக் குழுவின் செயலாளனாகவும், பொருளாளனாகவும் நானே பொறுப்பேற்றேன். உள் நாட்டி லும், இலங்கை, மலேயா முதலிய வெளி நாடுகளிலும் நிதி வசூலைத்தொடங்கினேன். விழாவிற்கு நாளும் குறிப்பிட்டாகி விட்டது. திருச்சியில் நாங்கள் மணிவிழாஎடுக்க முடிவு செய்திருந்த அதே நாளில், நடிகர் யதார்த்தம் பொன்னுசாமி என்பவர், தஞ்சையில் பாவேந்தருக்கு மணிவிழா எடுக்கப் போவதாகச் செய்தி விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இச்செய்தியைப் பார்த்ததும் எனக்குப் பெரிய குழப்பமாக இருந்தது. உடனே புதுவை சென்று பாவேந்தரை நேரில் கண்டு இதைப்பற்றி அறிந்துவரச் சொன்னேன். அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை. அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்று தெரிந்தது. நான் விழாக்குழுவிலிருந்தே ஒதுங்கிக்கொண்டேன்.

திருச்சியில் ஒரு வாரம் பாவேந்தர் விழாவை நடந்த விழாக்குழுவினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாடகங்கள் நடத்தி ஓரிலக்கம் ரூபாய் திரட்டி அவருக்கு