பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103/நானறிந்த பாரதிதாசனார்

மாணவர்கள் பெரும்பாலோர் வந்து என் பேச்சைக் கேட்டு மகிழ்வதுண்டு.

நான் ஒருநாள் ஓய்வாக இருந்தபோது அவருடைய மாணவர்களுள் ஒருவர் என்னிடம் வந்து பாரதிதாசனார் இளமையிலே முருக பக்தராக இருந்தபோது பாடிய பாடல்களை எல்லாம் என் முன்னிலையில் இசையோடு பாடிக்காட்டினார். அவை மிகவும் உருக்கமான பாடல்களாக இருந்ததைக் கண்டு நான் வியந்தேன். வேறொரு கூட்டத்தில் புதுவையிலே நான் தலைமை வகித்துப் பேசியபோது, `பாரதிதாசரைக் குறித்து உங்கள் எண்ணம் என்ன?’ என்று ஒருவர் கடிதம் மூலம் கேட்டு எழுதியிருந்தார்.

``நம் பாவேந்தரைப் போற்றாத தமிழன் நம் நாட்டில் இருக்கமாட்டான். அவ்விதம் இருந்தால் அவன் தமிழனல்லன்! `தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்!' என்று பாடியுள்ள ஒரு வீரத்தமிழ்க் கவிஞருக்கு என் பாராட்டு எந்த மூலை! எனினும் சீர்திருத்தச் செம்மலாகிய இவர், அடிமை மனப்பான்மையைக் குறிக்கும் `தாசன்’ என்னும் பெயரை வைத்துக் கொண்டது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. பாரதியார் நாட்டு விடுதலைக்காகப் பாடினார். நமது புரட்சிக் கவிஞர் தமிழர்கட்காகவும், தமிழுக்காகவும் பாடினார். ஆதலால் நம் பாவேந்தர் பாரதியாருக்கு எந்தவகையிலும் குறைந்தவரல்லர் என்பது என் எண்ணம்" என்று நான் அவருக்குத் தெரிவித்தேன்.

புலவர்குழு திருச்சியிலும் தஞ்சையிலும் நடந்தபோது நான் அந்தக் கூட்டங்களுக்குச் செல்லவே இல்லை. முத்தமிழ்க் காவலராகிய கி.ஆ.பெ. விசுவநாதம் சென்னை வந்திருந்தபோது 'நீங்கள் என் இரண்டு கூட்டங்களுக்கும் வரவில்லை? நீங்கள் வந்திருந்தால் பாரதிதாசரைப் போல உங்களையும் யானையின் மீது ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்து இருப்பேன்’ என்றார். நீங்கள்