பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது







என்னுடைய இருபதாவது வயதிலேயே பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் சுயமரியாதை இயக்கக்குடியரசு வார இதழைப் படித்தேன். அதனால் தன்மான இயக்கக் கொள்கைகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. மேலும் ஜீன்ஸ் மெஸ்லியர் மரணசாசனம் (மூன்றுபாகம்), இங்கர் சால் புத்தகங்கள், பெரியாரின் தத்துவ விளக்கம், பிரகிருத வாதம் முதலிய நூல்களைப் படித்தேன். சாதி, மதம், கடவுள், முக்தி, நரகம் முதலியவைகளில் எனக்கு நம்பிக்கை அறவே அற்றுப்போயிற்று. நாத்திகவாதத்தில் நல்ல தெளிவும், ஆழ்ந்த நம்பிக்கையும் எனக்குண்டு. எவ்வளவு நல்ல எண்ணத்தோடு, விருப்பு வெறுப்பு இல்லாமல் பல ஆயிரம் தடவை சிந்தனை செய்தாலும், 'கடவுள் உண்டு' என்பதற்கு என்னால் ஆதாரம் காண இயலவில்லை. ஆகவே, நான் ஒரு நல்ல பகுத்தறிவுவாதி' என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

முதலில் செய்தித்தாள்களில் வெளியான சில பாரதிதாசன் கவிதைகளைப் படித்தேன். பின்பு திருமதி.குஞ்சிதம் குருசாமி அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட பாரதிதாசன் கவிதைகளைப் படித்தேன். ஒவ்வொரு கவிதையும் இனித்தது. ஆயினும் சாதி, மதம், கடவுள்களைப் பற்றிய கவிதைகள், எல்லாக் கவிதைகளையும் விட என் உள்ளத்தில் இடம் பெற்றன. இதன் பயனாகப் பாரதிதாசன் அவர்களைக்காணவும், பேசவும் வேண்டுமென்ற விருப்பம் என் உள்ளத்தில் பதிந்தது.