பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119/இன்ப இரவு


மிகச் சுவைத்தார். பிறகுசென்னைக்குநான் சென்றபோது முல்லை, திரு.முத்தையாவிடம் அப்பாடலைக் கொடுத்து மீண்டும் முல்லையில் வெளியிடுமாறு சொன்னேன். அவர்களும் அவ்வாறே வெளியிட்டார்கள்.

ஒரு திங்கள் கழித்து நானும் பாவேந்தரும் மீண்டும் கானாடுகாத்தான் சென்றோம். ஆனால் முத்தமிழ்நிலையத் துவக்கத்துக்கு அங்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ஆயினும், அன்று கூட்டத்திற்கு வந்திருந்த கோனாப்பட்டு முருகு, சுப்பிரமணியம் (பொன்னி ஆசிரியர்) ஆத்தங்குடி அரு. பெரியண்ணன் (முருகு. சுப்பிரமணியத்தின் மாமன்) அ.பழ. பழனியப்பச்செட்டியார், முருகப்பா முதலியவர்கள் கோனாப்பட்டில் ஆதரவு இருப்பதாகவும், அங்கு வந்தால் ஆவன செய்வதாகவும் கூறி, எங்கள் இருவரையும் கோனாப்பட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். பன்மொழிப் புலவர் க.அப்பாதுரையவர்கள் கோனாப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் அப்போது ஆசிரியராக இருந்தார். கோனாப்பட்டில் முத்தமிழ் நிலைய விதிமுறைகளைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்தோம். 'முத்தமிழ் நிலையம்- கோனாப்பட்டு' என்ற பெயரில் கோனாப்பட்டுத் தோழர்கள் பாதித் தொகையும், போடிநாய்க்கன்பட்டி- நாமக்கல் தோழர்கள் பாதித் தொகையும் போடுவதாக முடிவு செய்து, முதலில் நாடகம் அரங்கேற்றுவதும், அதன் பிறகு புத்தகங்கள் வெளியிடுவதும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

நானும் பாரதிதாசனும், நண்பர் கிருஷ்ண ராஜூவும் நடிக-நடிகையர், நாட்டிய-இசையாசிரியர் முதலியவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டுச் சென்னை சென்றோம். அங்கே டாக்டர். ஏ. கிருஷ்ணசாமி பார்-அட்.லாவினுடைய 'லிபரேட்டர்' பத்திரிகை அலுவலகத்தில் (மவுண்ட் ரோடு) தங்கியிருந்து ஆக வேண்டிய காரியங்களைக் கவனித்தோம். இரண்டு நாட்களுக்குப்பிறகு கோசல்ராம், எஸ் ஆர். ஜானகி ஆகியோர் வீட்டில் தங்கியிருந்து சில நடிகர் நடிகைகளைப் பார்த்தோம்.