பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121/இன்ப இரவு



அவர்களது ஆதரவில் தோழர்கள் பா.மு.சு.முருகு.சுப்பிரமணியம் செட்டியார், மு செல்லப்ப ரெட்டியார், கா. கப்ருபண்ணன் முதலிய அறிஞர்களால் துவக்கப்பட்டிருக்கும் 'முத்தமிழ் நிலையம்' என்னும் பெயர் கொண்ட கழகத்திற்கு வந்து தங்களுடைய மரியாதையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று பெரியார் ஈ.வெ.ரா அழைக்கப்பட்டார். அதற்கிணங்க 2-ஆம் தேதி பகல்,பெரியார் முத்தமிழ் நிலையத்துக்குக் சென்றார். அங்கு நிலையத்தைச் சேர்ந்த தோழர்கள் அவரை அன்புடன் வரவேற்று விருந்தளித்தார்கள். விருந்தில் தோழர்கள் சிந்தனைச்சிற்பி மா.சிங்காரவேலு, 'லிபரேட்டர்’ பத்திரிகையின் துணையாசிரியர் க.அப்பாதுரை எம்.ஏ., ஆகியவர்களும் மற்றும் நடிகையர் அரங்க நாயகி, முனி ரத்தினம்மா, இராதாமணி, சுலோசனாபாய் முதலியவர்களும், பரதநாட்டியம் பயிற்றும் தோழர் இராமசாமிப் பிள்ளை அவர்களும், ஓரியண்டல் நாட்டியம் பயிற்றும் வங்காளத்தைச் சேர்ந்த தேவிபிரசாத் அவர்களும் இசைப்புலவர்ஞானமணி அவர்களும், புதுவை பாரதிதாசன் அவர்களும் கலந்து கொண்டனர். விருத்திற்குப் பின் மேற்கண்ட நடிகையர்களாலும், ஆசிரியர்களாலும், பாரதிதாசன் அவர்களின் கவிதைகள் நடனமாக நடித்துக் காட்டப்பட்டன. சில வாலிபர்களால் வடநாட்டு உதய சங்கர் அவர்களின் நாட்டியமும் நடத்திக்காட்டப்பட்டது. இவைகளில் மூடநம்பிக்கைப் பாட்டுக்களோ, ஆபாச வார்த்தைகள் கொண்ட பாட்டுக்களோ இல்லாமல் கவிதைகள் பெரிதும் அறிவுக்கு விருந்தாகவும், படிப்பினைக்கேற்றதாகவும் இருந்தன. இவை முடிந்ததும் தோழர் சின்னராசு அவர்கள் பெரியாரைப் பேசுமாறு கேட்டுக் கொண்டார்.

பெரியார் பேச்சு:

"அன்புள்ள தோழர் பாரதிதாசன் அவர்களே! மற்றும் நடிகையர், நடிகர், பண்டிதர், ஆசிரியர், சொந்தக்காரர் அவர்களே!