பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135/இன்ப இரவு



உடல்நலக் குறைவால் நிதிவசூல் சிறிது மந்தமாக இருந்தது.

உடல் நலம் பெற்றவுடன் நான் சென்னை சென்றேன். சலகை ப. கண்ணன் அவர்கள் அவ்வமயம் சென்னையில் இருந்தார். திருவாளர்கள் ப. கண்ணன், என்.வி. நடராசன், டி.என். இராமன் ஆகியவர்களிடம் நிதி விஷயத்தைச் சொன்னேன். அதாவது சென்னையில் ஒருவிழா ஏற்பாடு செய்து வசூலான நிதிப்பணத்தை வழங்கிவிடலாம் என்றும், இல்லையேல் நாமக்கல்லிலேயே கொடுத்து விடுகிறோம் என்றும் சொன்னேன். அதற்கு அவர்கள் அறிஞர் அண்ணா தலைமையில் நிதி ஆதரவுக் கூட்டம் போட்டு மற்ற கட்சியினரையும் அழைத்து ஆவனசெய்து விரைவில் நிதி கொடுத்துவிடலாம் எனக் கூறினர். அண்ணாவுக்கும் இது விபரத்தைக் கடிதம் எழுதிக் கேட்கலாமென்றும் சொன்னார்கள். அவ்வாறே கடிதம் எழுதி அண்ணாவின் சம்மதம் பெற்றோம். 1946ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 12ஆம் நாள் மாலை 5-30 மணிக்குக் கோகலே மண்டபத்தில் பாரதிதாசன் நிதி ஆதரவுக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அறிஞர் அண்ணா, எஸ்.எல்.பாரதி, டாக்டர்.ஏ.கிருஷ்ணசாமி பார்-அட்-லா, கி.வ.ஜகன்னாதன், கம்பதாசன் ஆகியோர் பேசினார்கள். அறிஞர் அண்ணா பேசும்போது, இங்கு வந்துள்ள பெரியவர்கள், அவரவர்களுடைய நன்கொடைத் தொகையை இங்கேயே கூறிவிடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். தம்முடைய அன்பளிப்பு ரூ 150/- என்று சொன்னார். பிறகு டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி ரூ 150/-ம், கவிஞர் கம்பதாசன் ரூ 500/-ம், கி. வ. ஜ. ரூ 25/-ம் நன்கொடை தருவதாகச் சொன்னார்கள். மற்றவர்களின் தொகை என்ன என்பது இப்பொழுது எனக்கு நினைவில்லை.

பாவேந்தர் நிதிவிஷயத்தில் அறிஞர் அண்ணாவின் தலையீடு ஏற்பட்டவுடன், புதுமுறுக்குடன் எல்லாரும் செயல்பட்டனர். நிதி வேகமாக வந்து குவியத்தொடங்கியது. 29-7-46 ஆம் நாள் பாவேந்தரின் நிதியளிப்புவிழா