பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் திருவையாறு லோகநாத சீதாராம் அவர்கள் - தாமோதரனாரும், தாயுமானவரும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் வாழ்ந்த திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்தவர்.

தரணியின் முதுகு நெளியப்படை நடத்தித் தஞ்சாவூர்வரை முற்றுகையிட்ட சிவாஜியின் பேரால் தமிழ் ஏடு நடத்தி வந்தவர்; மாம்பலக் கவிச்சிங்கம் போல மனப்பாடக் கவிஞர்.

பாவேந்தரின் நம்பிக்கைக்குரிய பார்ப்பன நண்பர்கள் இருவர். ஒருவர் ஓவியர் வேணு கோபால சர்மா; மற்றொருவர் இந்தத் திருலோகம். பாரதியார் குடும்பத்தோடும் இவருக்கு நெருக்கமான தொடர்புண்டு.

‘வாழ்நாள் முழுதும் சருகரிக்க முடிந்ததே தவிர குளிர்காய முடியவில்லை என்று கூறிவிட்டுச் சஞ்சலத்தோடு கண்மூடியவர்.

'கந்தர்வகானம்' பாடிய இக்கவிஞர் மக்கள் கானம் பாடிய பாவேந்தர் பற்றிய நினைவலைகளை, இக்கட்டுரையில் கரையிட்டுக் காட்டுகிறார்.