பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/142


சுத்தச் சுயமரியாதை இயக்கக் கவிஞராக பாரதிதாசன் பிரசித்தமடைந்தபோது, ஒரு பார்ப்பனருக்குத் தாசன் என்று தம்மை அவர் அழைத்துக் கொள்வதை இயக்கப் பிரமுகர்கள் சிலர் ஆட்சேபித்தபோதும்கூட, பாரதிதாசன் தம் பெயரை மாற்றிக்கொள்ள ஒப்பவில்லை. பாரதியை இனத்தின் பெயரால் யார் இழிவு கூறுவதையும் பொறுக்காத உணர்ச்சி வேகத்துடன் அவர்களின் மடமையைச் சாடும் நேர்மை அவரிடமிருந்தது.

பாரதிதாசன் பார்ப்பனீய எதிர்ப்பாளர் என்பது நாடறிந்த உண்மை. ஆயினும் அவருடைய அந்தரங்க நட்பிற்கும் மதிப்புக்கும் உரிய பார்ப்பனர் பலர் உளர். அவர்களிடையில் இந்தக் கட்டுரையாளருக்கும் ஒரு சிறப்பான இடம் இருந்து வந்தது.

புரட்சிக்கவி என்ற மகுடமிட்டு பில்ஹண காவியத்தைப் புரட்சித் திருப்பத்துடன் அருமையான தமிழில் அவர் இயற்றியிருக்கிறார். இப்படைப்பால் பாரதிதாசனுக்கே 'புரட்சிக்கவி' என்ற கீர்த்தி நிலைத்துவிட்டது.

கவியரசர் பாரதிதாசனை முதன் முதலில் நான் சந்தித்தது விழுப்புரத்தில். 1938-ல் பாலபாரதம் என்ற மாதப் பத்திரிகையை அங்கிருந்து நடத்திக்கொண்டிருந்தேன். பாரதிதாசனுடைய கவிதைகள் முதல் தொகுதி சில மாதங்களுக்கு முன்புதான் வெளிவந்திருந்தது. பேராசிரியர் கே. ஸ்வாமினாதன் தினமணி ஆண்டுமலரில் பாரதிதாசன் ஒரு சிறந்த கவிஞர் என்ற சிறிய அறிமுகக் கட்டுரை எழுதியிருந்தார். தேசீயவாதிகளிடையிலும் அக்கிரகாரவாசிகளிடையிலும் பொதுவாகப் பாரதிதாசனைப் பற்றிய அர்த்தமற்ற ஒரு கசப்பு நிறைந்திருந்தது. பெரியாரின் கட்சிக்காரராகவும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களிடை மட்டும் அதிகம் பழகி வந்தவராகவும் இருந்தபடியால் காங்கிரஸ்காரர்களுக்கு அவரைப் பிடிக்காது சுயமரியாதைக் கருத்துக்களையும் பார்ப்பனத் துவேஷக் கருத்துக்களையும் பலமாக அவர் பிரசா-