பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்


தருமபுரியா? நான் வந்திருக்கிறேன்...உட்கார். ’’ நான் தயங்கிக் கொண்டே அமர்கிறேன்.

“பொன்னடி சொன்னான், உன் பெயர் மணிவேலன் என்று! நீ எழுதிய 'தென்னைப்பெண்னே' என்ற பாடலைப் படித்தேன்; அப்படித்தான் எழுதவேண்டும்.இப்பொழுது நிறையபேர் கவிதை எழுதுகிறார்கள், முன்பெல்லாம் எல்லோரும் கடவுளைப்பற்றியே எழுதினார்கள்; இப்பொழுது எல்லோரும் காதலைப்பற்றியே எழுதுகிறார்கள். நீ தான் இயற்கையைச் சுவைத்து எழுதியிருக்கிறாய். கழுதையைப் பற்றி எழுதினாலும் காப்பியச் சுவையோடு இருக்க வேண்டும். ’’

நான் தலையை மட்டுமே ஆட்டினேன்.

“நூல்கள் ஏதாவது எழுதியிருக்கிருயா?’’

ஆகா! இந்தக் கேள்வியைக் கேட்டதும் பாலில் பழம் நழுவிய கதையாக இருந்தது எனக்கு. ஏனெனில் மழலை இன்பம்' என்ற கையெழுத்துப்படியைச் சிறப்புரை பெறவே எடுத்துச் சென்றேன்.

கையிலிருந்த-இல்லை, பையில் மறைத்து வைத்திருந்த ஏட்டை நீட்டினேன். மூக்குக்கண்ணாடி ஏறியது; அதில் என் பிழை 'உருப்பெருக் காடியில் தெரிவது போல் தெரியப் போகிறது! நண்பர்கள் சொன்னபடி நமக்கு மரியாதை நடக்கப் போகிறது' என்று அவர் முகத்தையே படித்துக் கொண்டிருந்தேன்.

நன்றாக எழுதுகிறாயே!...ஆனால் இதோ...இங்கே.பார் ...குற்றியலுகரத்தைப் பிரித்துப் போட்டிருக்கிறாய். புணர்ச்சியில் ஒரசை குறைகிறது. இது தவறு. இப்படி வரும்போது ஏகாரத்தைச் சேர்த்துவிடு!'

தலையை மட்டும் சாமிமாட்டைப் போல் ஆட்டினேன்.