பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/170




ஆனால் அதைப்படமாக்குதல் உரியதல்ல. கவிஞர் கலைஞர்: அரசியல்வாதி; வாழ்வின் இறுதிப்படியில் நின்று கொண்டிருப்பவர். ’இவருக்கு ஏன் இந்தப் படத் தொழில் பைத்தியம்?’ என்ற கேள்வியே என் உள்ளத்தில் எழுந்தது. அவர் முயற்சி தோல்வியில் முடிந்ததில் வியப்பில்லை!

கவிஞர் சிவாஜியையும் மற்றுஞ்சிலரையும் எதிர்பார்த்துச் சென்னை வந்திருந்தார். ’சிவாசி’ புகழைக் குயில் கூவிக் கொண்டே இருந்தது. கத்தும் குயிலோசை காதில் பட்டால் மட்டும் போதுமா?கரையும் உள்ளம் வேண்டாமா?

கவிஞர் இல்லத்தில் தமிழ், இலக்கியச் சூழ்நிலையைக் கண்டேன். படத்தொழில் சூழ்நிலை ஒன்றையும் நான் காணவில்லை

பாரதிதாசனார் தமிழகம் போற்றும் மாபெருங்கவிஞர். ஓர் அரசியல் தலைவர். தமிழ்த்தாயின் தவப்புதல்வர். ஆனால் அவர் இல்லத்தில் அவற்றுக்குரிய ஆரவாரத்தை நான் காணவில்லை. ஏமாற்றத்தின் இடையிலேயும் கவிஞருக்குக் கவலை உள்ளம் இருந்ததாக வெளித்தெரியவில்லை. ஒரு கால் அது உள்ளூர இருந்திருக்கலாம்.

வேறொரு நண்பரும் அப்போது வெளியூரிலிருந்து வந்திருந்தார். கவிஞர் உணவருந்தும்படி வற்புறுத்தினார். வழக்கம்போல் அன்று மீன்குழம்பு. இல்லத்தரசியார் பழனியம்மாள் அப்போது அங்கிருந்தார்கள். இலக்கியப் பேச்சு நடைபெற்றுக்கொண்டிருந்தது மனைவி நடமாடிக் கொண்டிருத்தார். அவரைச் சுட்டிக்காட்டிக் கவிஞர் ’இவளைப் பார்த்தால் எப்படித் கவிதை வரும்?' என்று ஒருபோடு போட்டுவிட்டார்! கவிஞர் வேடிக்கையே பேசினர். நாங்களும் புன்னகை செய்து கொண்டோம். கவிஞர் இல்லறத்தைச் சுவைகுன்றாமலே நடத்திக் கொண்டு வந்திருந்ததாக உணர்ந்தேன்.

1964ஆம் ஆண்டு தமிழர் திருநாளை ஒட்டிய ஒருபோது திருவல்லிக்கேணிக் கடற்கரையில் அமைந்திருந்த என்