பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/172



அவரை அமரவைத்தேன். அப்போது எம்.லிட். ஆய்வினை முடித்துவிட்டு பிஎச். டி. பட்டத்திற்கு ஆய்வு நடத்திவந்தேன். என் ஆராய்ச்சியில் அவர் அவ்வளவு அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. பொதுவாகவே அக்காலத்தில் உயர்கல்விக் கழகங்களில் நடைபெற்று வந்த தமிழ் ஆராய்ச்சி பற்றி அவர்கள் அறியவும் இல்லை; அக்கறையும் காட்டவில்லை.

பாவேந்தரிடம் அவர் பாப்புனையும் ஆற்றல் பற்றிக் கேட்கவேண்டும் என்பது என் நெடுநாள் ஆவல். அவர், அண்மையில் குயில் இதழில் (30-12-58) எழுதிய ஓர் அழகுச்சிறுபாடல் பற்றிக் கேட்டேன். அந்தப் பாடல் இதுதான்:

படி
எடுப்பு:
நூலைப்படி!- சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி
உடனெடுப்பு:
காலையிற் படி கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும் படி
நூலைப்படி!
அடிகள்
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டும் அப்படிக்
கல்லாதவர் வாழ்வதெப்படி?
நூலைப்படி!
அறம்படி பொருளைப் படி
அப்படியே இன்பம் படி
சிறந்த தமிழ்நான் மறை
பிறந்த தென்று சொல்லும்படி
நூலைப்படி!