பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177/இழந்த செல்வம்



தினத்திடம் கூறினேன். எல்லாம் எனக்குத் தெரியும். நான் நாரணதுரைக்கண்ணரிடம் கலந்து ஏற்பாடு செய்து கொள்கிறேன் என்றார். மறுநாள் வந்தார் அந்த மத்தியக்கமிட்டியில் நெடுஞ்செழியன், சிற்றரசு, முதலியவர்களைப் போடலாமல்லவா என்றார். கடுமையாக மறுத்தேன். பிறகு வீரமணியைப் போடலாமா என்றார். மறுத்தேன். எஸ். இராமநாதன், முன்னாள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மணவாள ராமானுஜம், வி.பி.இராமன், அகிலன் முதலியவர்களைச் சொன்னேன். அவர் அவர்களை மறுத்தார். இன்று -அதாவது பதினைந்து நாட்களுக்குப்பின் ஆர்ட் டைரக்டர் அம்மையப்பன் வாயிலாகச் சேதி அனுப்பப்பட்டிருக்கிறது. வேறு யாரையாவது கொண்டு விழாவை நடத்திக்கொள்ளச் சொல்லுங்கள் என்று. நான் இவர்களைக் கேட்டதுண்டா விழா நடத்தச் சொல்லி?’’ என்று என் அண்ணாவுக்கு எழுதியிருந்தார்.

விழாமுயற்சி ஆதரவிழந்ததை நான் அறியேன். நான் அதுவரை ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் நான் ஈடுபட்ட முயற்சியே தோல்வி கண்டது எனக் கவிஞர் தவறாக எண்ணியிருக்க வேண்டும். உண்மையில் நாரணதுரைக்கண்ணரும் பிறரும் மேற்கொண்ட முயற்சியே தோல்வியில் முடிந்திருக்க வேண்டும். இது பற்றிக் கவிஞரைச் சந்தித்து விளக்கம் கேட்க வேண்டும் என்று எண்ணிய என் எண்ணம் கைகூடாதவாறு கவிஞர் விரைவில் இவ்வுலகையே நீத்துச் சென்று விட்டார்.

12-4-1964 அன்று பாவேந்தரை அவர் இல்லத்தில் கண்டு பேசினேன். பாவேந்தருக்கு உடல் நலமில்லாது போக சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை 21-4-64 காலை கேள்விப் பட்டேன். உடனே மருத்துவமனைக்குச் சென்றேன். இரயிலில் மூன்றாம் வகுப்புப் பயணியைப் போலப்