பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/12


கொஞ்ச நேரம் பார்வையால் எடை போட்டார். ஒளி மிகுந்த கண்கள் உள்ளத்தை ஊடுருவும் தீட்சண்யமான பார்வை! பிறகு சாட்டையைச் சொடுக்குவது போலச் சில வார்த்தைக் கேள்விகள்:

யார் நீ?
ராஜகோபால்
ஊர்?
சிக்கல்!
இது?
என் காதலி.
எங்க?
கலப்புத் திருமணம் செய்துக்கலாமுன்னு......
சாமி கும்புடுவயா?
இல்லை!
சாப்பிட்டயா?
இல்லை!
போய் முதல்ல சாப்பிடு.

இதுதான் முதன் முதலில் பாவேந்தருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்.

சாப்பிட்டு முடித்துவிட்டு வந்தேன். மேல் பூச்சு இல்லாத என் பச்சையான பதில்கள் அவருக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும். இரக்க உணர்வுடன் என்னைப் பார்த்தார். என்னை அருகில் அழைத்து, "கலப்பு மணம் இருக்கட்டும். முதல்லே இதை (அருகில் நின்று கொண்டிருந்த பெண்ணைக் காட்டி) ஊரில கொண்டு போய்விட்டுட்டு வந்துடு. உன்னை நான் வேலைக்கு வெச்சுக்கறேன். கலப்பு மணம் அப்புறம்!...... என்ன?" என்று சொன்னார். வழிச் செலவுக்குப் பணமும் கொடுத்தார். நான் அப்பெண்ணை ஊரில் கொண்டுபோய் விட்டு விட்டு மீண்டும் புதுவை வந்து சேர்ந்தேன்.