பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17/மார்கழியின் உச்சியில்


நான் வாழ்க்கையில் சந்தித்த பலருள் பாவேந்தர் மிக பெருமிதமான தோற்றமுடையவர். உண்பது, உடுப்பது, உரையாடுவது, நடப்பது யாவற்றிலும் ஒரு பெருமிதம் தென்படும். எவ்வளவு பெரிய நிலையில் இருப்பவர்களும் பாவேந்தர் முன் வரும்போது, அவர்களையும் அறியாமல் அவர்கள் உள்ளத்தில் ஒருவித அச்சங்கலந்த மரியாதை தோன்றுவதை நான் பார்த்திருக்கிறேன். பேரறிஞர் அண்ணா, பெரியாருக்கு அடுத்தாற்போல் இந்த நூற்றாண்டுத் தமிழர்களால் மதிக்கப்பட்ட பெரிய மனிதர். அவரே பாவேந்தர் முன்னால் வரும்போது உட்காரமாட்டார். "அண்ணுத்துரை! நிக்கற? உக்காரு!" என்று பாவேந்தர் சொல்லுவார். ஆனால் அண்ணா உட்காரமாட்டார். பாவேந்தரின் எழுத்து அண்ணாவின் துவக்கக் கால வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தது.

பாவேந்தர் இயல்பாகவே பரந்த உள்ளம் உடையவர். யார் வந்து வாழ்த்துக் கவிதை, பாராட்டுக் கவிதை கேட்டாலும் முகங்கோணாமல் எழுதிக் கொடுப்பார். தன்னைத் தேடிவருபவர்க்கெல்லாம் சோறு போடுவார். பழகியவர் எவ்வளவு தாழ்ந்தவராக இருந்தாலும், கொஞ்சம் கூடப் பெருமை பாராட்டாமல் உதவி செய்வார். வசதியற்ற நண்பர் யாராவது கூட்டத்துக்கு அழைக்கவந்தால், "நீயேன் கைக்காசை செலவு பண்ற? நாந்தா இத்தனாந்தேதி வேறொரு விஷயமா அங்க வர்ரனே! அப்பப் பாத்து வைச்சுக்க!" என்று உரிமையோடு கூறுவார்.

தமது கவிதை ஆற்றலில் பாவேந்தருக்கு அளவு கடந்த நம்பிக்கை உண்டு. எந்தச் செய்தியை எப்படிச்

சொன்னால் படிப்பவர் மனதில் உடனே படியும் என்பதை நுட்பமாக உணர்ந்து பாடுவதில் அவருக்கு நிகர் அவரே! "இதோ பார்!இதைப் படிச்சான்னா அப்படியே உள்ளத்திலே உட்காரும்!" என்று சொல்லிவிட்டுக் கவிதை எழுதுவார். அவ்வளவு தன்னம்பிக்கை.