பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/18


எவ்வளவு புகழ் பெற்றவரானாலும் தகுதியில்லாதவர் வளர்ச்சியைப் பாவேந்தர் மதிப்பதில்லை. பிழையாக எழுதிப் பாவேந்தரின் பாராட்டைப் பெறுவது என்பது முடியாத காரியம். முன்னுரை வேண்டி வந்த சிலரைப் பார்த்து, "உன்னையெல்லாம் கவிதை எழுதலைன்னு எவங்கேட்டா? போ போ! வந்துட்டானுக!" என்று திட்டி அனுப்புவார்.

இறைவன் மீது பாடும் துதிப்பாடல்களைத்தான் மக்கள் பாராயணம் செய்வது வழக்கம். பக்திப் பாடலைப் போல் பாவேந்தரின் பாடலையும் பாராயணம் செய்ய இந்த நாட்டில் ஒரு பெருங்கூட்டமே உண்டு. 'பாவேந்தர் பாடலைப் படித்தேன்’ என்று சொல்லிக்கொள்வதைக் கேவலமாக எண்ணிய தமிழ்ப் பேராசிரியர்களை எனக்குத் தெரியும். இன்று பாவேந்தர் பாடலை ஆராய்ச்சி செய்து 'டாக்டர்’ பட்டம் பெறப் பல பேராசிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்வருகின்றனர். இந்த நாட்டிலே பாவேந்தருக்குக் கடற்கரையில் சிலையெடுக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் வெளியிட்டவன் நான்தான்.[1] பேரறிஞர் அண்ணா அதை நிறைவேற்றினார்.

பாவேந்தரின் தொடக்கநாள் கவிதைகள் மிகவும் கரடு முரடானவை. எழுத்தசை எண்ணிப்பாடும் வண்ணப் பாடல்களையும் சந்த விருத்தங்களையும் தம்முடைய இருபதாம் வயதுக்கு முன்பே பாவேந்தர் எழுதிக் குவித்தவர். எவ்வளவுக் கெவ்வளவு புரியாத பாடல்களை ஒருவன் எழுதுகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் பெருங்கவிஞன் என்று எண்ணும் புலவர் கூட்டத்துள் தாமும் ஒருவராக இருந்தவர். இந்தத் தவறான எண்ணம் எவ்வாறு தம்மை விட்டு நீங்கியது என்பதைப் பாவேந்தர் ஒருமுறை என்னிடம் கூறினார். அவர்


  1. 'சிலை வைப்போம்' என்ற கவிதை 22-4- 55 முரசொலி இதழில் என்னால் எழுதப்பட்டது.