பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41/முழுமதியனையார்



அவர் எழுதிய முதற்பாட்டு என்று கூறுவோரும்.உண்டு. அவர், இதற்குமுன் பல பக்திப்பாடல்கள் இயற்றியிருக்கிறார். வேண்டுமானால், திரு பாரதியாரவர்களைப் பின்பற்றி எளிய நடையில் எழுதிய பாடல்களுள், இதுதான் முதற்பாட்டு என்று சொன்னால், பொருத்தமாக இருக்கும்.

திரு. பாரதிதாசனவர்கள் பாட்டு எழுதத் தொடங்கினால் பக்கத்தில் அகராதி இருக்காது; யோசித்து யோசித்து, அடித்தல் திருத்தலுடன் எழுத மாட்டார். தரையில் ஒரு பாயை விரித்துக் கவிழ்ந்து படுத்தவண்ணம் எழுதத் தொடங்குவார். சிலசமயம் சாய்வு நாற்காலியிலமர்ந்து, அதன் நீண்ட கைப்பிடியின் குறுக்காக ஒரு மனையைப் பொருத்தி எழுதுவார். பாடல் எழுதி முடியும் வரை, 'சிகரெட் தொடர்ந்து புகைந்தபடியே இருக்கும்'. எழுத்தோட்டமும் விரைந்து சென்று கொண்டேயிருக்கும்.

‘புலவருக்கு வெண்பா புலி’ என்பார்கள். அத்தகைய வெண்பாவினும் கடுமையானது, வண்ணப்பாடல். திருப் புகழ்ச்சந்தம் போன்ற வண்ணப்பாடல்களையும் மிக எளிதாக விரைந்து எழுதும் ஆற்றல், திரு. பாரதிதாசனவர்களிடம் அமைந்திருந்தது. உள்ளத்தைக் கவரும் வார்த்தைகளும், அவர் பாடலில் முந்திக்கொண்டு வரும். இப்படிப்பட்ட ஒருசில கவிஞர்களைப் பார்த்துத்தான் 'ஒரு சிறந்த கவிஞன் பிறவியிலேயே கவிஞனாகப் பிறக்கிறான்’ என்று கூறுகிறார்கள் போலும்.

திரு. பாரதிதாசனவர்களிடம் குறும்புத்தனமும் நகைச்சுவைப் பேச்சும் இயல்பாகவே அமைந்திருந்தன. அதனால் அவருடைய பாட்டுக்கள் பலவற்றுள்ளும், அத்தன்மை அமைந்திருக்கக் காணலாம். அப்பாடல்களைப் படிப்போர், தம்மையும் மீறி வாய்விட்டுச் சிரிப்பர்; மகிழ்ச்சிக் கடலிலாழ்வார்.