பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/60



கொடுப்பதை நான் வழக்கமாக்கிக் கொண்டேன். நாவல்பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவை அவருடம்புக்குச் சேரா. ஒருமுறை நாங்கள் அவற்றை வீட்டில் வாங்கி வைத்திருந்ததைக் கண்டதும் கிணற்றில் எடுத்துக் கொண்டுபோய்க் கொட்டிவிட்டார்.

என் தந்தையார் சிந்தனையில் மூழ்கி மும்மரமாக எழுத்து வேலையில் ஈடுபட்டிருக்கும்போது நாங்கள் திண்டாடிப் போவதுண்டு. சற்று நேரத்துக்கு முன்தான் சாப்பிட்டு முடித்திருப்பார். திடீரென்று 'பாப்பா!' என்று குரல் கொடுப்பார். நான் எழுந்து ஓடுவேன். என்னைப் பார்த்து 'என்னம்மா! நான் சாப்பிட்டுவிட்டேனா?’ என்று கேட்பார். சிலசமயம் தட்டில் உணவு பரிமாறியிருந்தால் அப்பளத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டுப் போய்ப்படுத்துக் கொள்வார். கொஞ்ச நேரங்கழித்து, "என்ன பண்றீங்க எல்லாம்? நா பசியோட கிடக்கற...!" என்று சத்தம் போடுவார். சில சமயம் பாதி சாப்பிட்ட நிலையில் கைகழுவிவிட்டு எழுந்து விடுவார்.

குளிப்பதற்காகக் குளியல் அறையில் ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் நிரப்பி, உட்காரும் பலகையும், செம்பையும் அருகில் வைத்துவிட்டு அவருக்கு நாங்கள் அறிவிப்பது வழக்கம்.என் தந்தையார் குளிப்பதற்கு உள்ளே செல்வார். கொஞ்ச நேரம் பலகையில் மெளனமாக அமர்ந்திருப்பார். பிறகு வெந்நீரை ஒரு கையால் மொண்டு மொண்டு காலில் ஊற்றிக் கொண்டு மற்றொரு கையைச் சுண்டித் தாளம் போட்டுக்கொண்டிருப்பார். தாளச் சத்தத்தைக் கேட்டதும் என் தாயார், "போய்ப் பாரும்மா! சிட்டிகை வருது" என்று கூச்சல் போடுவார்.

சிலசமயம் சென்னையிலிருந்து அவசரமாக வீடு திரும்பும் போது இரவு நேரமாக இருக்கும். வீட்டில் அவருக்கு ஏற்ற உணவு இருக்காது. சோற்றைப்போட்டு இரசத்தை ஊற்றி அப்பளத்தைப் பொரித்து வைப்பார் என் தாயார். சோற்றை வாயில் அள்ளிப் போட்டுக்கொண்டு அப்பளத்தைக் கடிப்பார். பிறகு தூவென்று துப்பிவிட்டு