பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69/என் தந்தையார்




தந்தையாருக்கும் என் பிரிவு மிகவும் வேதனையைக் கொடுத்திருக்க வேண்டும். வழியனுப்பிவிட எங்களோடு வந்த தந்தையார், விழுப்புரம் வந்ததும் என்னிடம் சொல்லிக்கொள்ளாமலேயே சென்று விட்டார். என்னிடம் சொல்லிக்கொண்டால் நான் கண்ணிர் விடுவேன் என்று அவர் எண்ணியிருக்கலாம், தந்தையார் என்னிடம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டதால் எனக்கு வருத்தம்.

கட்டிப்பாளையம் சென்றதும் நான் தந்தையாருக்குக் கடிதம் எழுதவில்லை. தம்பி தங்கையரின் நலன் விசாரித்து அம்மாவுக்குக் கடிதம் எழுதினேன். சென்னையிலிருந்து திரும்பிவந்த தந்தையார், நான் அம்மாவுக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பார்த்தவுடன் என் வருத்தத்தைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என் வருத்தத்தைப் போக்க ஆதரவோடு அன்புக்கடிதம் ஒன்று வரைந்தார் .

”அம்மா! உன் பிரிவு என்னை மிகவும் வருத்துகிறது. உன்னைக் கணவன் வீட்டுக்கு அனுப்பிவிட்டுப் புதுவையில் இருக்கும் நான், வலிய தோளும் வாளும் இழந்த படைவீரன்போல் இருக்கிறேன்” என்று எழுதியிருந்தார். இவ்வரிகளைப் படிக்கத் தொடங்கியதும் என் கண்கள் நீர்க்குளமாகிவிட்டன. நினைக்கும்போதெல்லாம் நெஞ்சை உருக்கும் வரிகள், இந்த வரிகள்! திருமணம் என்ற புயல் எனது உயிரைப் புதுவையிலும் உடலைக் கட்டிப்பாளையத்திலும் ஒதுக்கிவிட்டதாக அப்போது நான் எண்ணி வருந்தினேன். என் உள்ள நிலையை உணர்ந்த என் கணவரும் உடனே விடுப்பெடுத்துக் கொண்டு என்னோடு புதுவை புறப்பட்டார்.

நான் புதுவைக்கு இந்த நாளில் வருகிறேன் என்று முன்னதாகவே கடிதம் போட்டுவிட்டுச் செல்வது வழக்கம். என் வரவை எதிர்நோக்கி அவர் எப்போதும் திண்ணையிலேயே அமர்ந்திருப்பார். பெருமாள் கோவில் தெரு முனையில் என்னைப் பார்த்ததும் வீட்டுக்குள்ளிருக்-