பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள்/76


கொண்டிருந்தபோது, என் தந்தையார் மிகவும் அன்போடு "இந்தாம்மா ரமணி! இங்கவா!" என்று கூப்பிட்டார். நானும் ரமணியும் அவரருகில் சென்றோம். அவர் கையில் ஒருதாள் இருந்தது. அத்தாளில் ஒரு பாடல் எழுதப்பட்டிருந்தது. அப்பாடலை இசையோடு பாடிக்காட்டினார். அப்பாடல் மிகத்தெளிவாகவும், எங்கள் பிஞ்சுள்ளங்களில் பதியும்படியும் எழுதப்பட்டிருந்தது. நாங்கள் மெய்மறந்து எங்கள் தந்தையார் பாடிய பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தோம். 'தலைவாரிப் பூச்சூடி' என்று தொடங்கும் அப்பாடல் 'தந்தை பெண்ணுக்கு!' என்ற தலைப்பில் இசையமுது முதற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலில் தாயினால் அலங்கரிக்கப்பட்டுப் பள்ளிக்கு அனுப்பப்படும் பள்ளிச் சிறுமியின் தோற்றமும், அவள் கண்ணீரும், தந்தையின் அறிவுரையும், கல்வியின் சிறப்பும் மிக அழகாக எடுத்துச் சொல்லப்படுகின்றன. இப்பாடல் திரைப்படப்பாடலாக வந்து தமிழகத்தில் நல்ல விளம்பரத்தைப் பெற்றதோடு, ஒவ்வொரு பெண்கள் பள்ளியிலும் பாடி ஆடி நடிக்கப்படுகிறது.}}

எங்கள் தாயார் பள்ளி செல்லாமல் பிடிவாதம் செய்த என்தங்கையைப்பற்றி முறையீடு செய்தபோது, தந்தையார் முகத்தில் சலனமேதுமில்லாமல் எங்களைக் கூர்ந்து நோக்கியதன் பொருள் எனக்கு இப்போதுதான் விளங்கியது. மற்ற தந்தையராக இருந்தால் தாயாருடன் சேர்ந்து கொண்டு பிள்ளைகளைத் திட்டித்தீர்த்திருப்பர்! ஏன்? அடித்தும் இருப்பர்! எங்கள் தந்தை பாவேந்தர் அல்லரோ? அவர் சிந்தனை உடனே கவிதையின் பக்கம் திரும்பி விட்டது. வீட்டிலே நடந்த இச்சிறுநிகழ்ச்சி, நாட்டுக்கே பாடமாக விளங்கும் இலக்கியமாக மலர்ந்து விட்டது.