பக்கம்:அருளாளர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 * அருளாளர்கள்


பயன் யாது? திருக்கோயில்களில் நாம் காணும் கடவுள் வடிவிற்கும் அவர்கள் கண்ட கடவுள் வடிவிற்கும் வேறுபாடு உண்டு. நாம் காண்பது விக்ரகங்களையே யாகும். ஆயின் இப்பெரியோர் படிமங்களைக் காணாமல் பரம் பொருளை நேரே கண்டனர். இல்லாவிடின் 'எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும் எங்ஙனம் மறந்து வாழ்கேன்?' என்று பாட மாட்டார்கள். நாம் நினைப்பதுபோல் படிமத்தையே இவர்களும் அர்ச்சாவதாரமாக கண்டார்களெனில் அதனை ஓயாமல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கருதவோ கூறவோ மாட்டார்கள். நம் அன்புக்குப் பாத்திரமானவர்களை நேரே இருக்கும் பொழுது விட்டுப்பிரிய விரும்ப மாட்டோம். ஆனால் அவர்கட்குப் பதிலாக அவர்களுடைய படத்தை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று யாரேனும் கட்டளை இட்டால் அது நடைபெறாத காரியம் என்று கூறத் தேவையில்லை.

எனவே, பொருளை விடாது பார்த்துக்கொண்டும் பொறிபுலன்களால் அனுபவித்துக் கொண்டும் இருக்க விரும்பினால் அது வெறும் படிமமாக அல்லது விக்கிரகமாக இருப்பின் யாரும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு உண்மையில் விரும்பினார்கள் எனின் அப்பொருள் நேரிடையாக அவர்கள் அனுபவிக்கும் முறையில் உயிர்பெற்றுள்ளது என்பதே கருத்தாம். இவ்வாறு இல்லாவிடின்,

‘பச்சைமா மலைபோல் மேனிப்
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!'

(நாலா 873)

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/107&oldid=1542976" இலிருந்து மீள்விக்கப்பட்டது