பக்கம்:அருளாளர்கள்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 * அருளாளர்கள்



ஆனால் பரஞ்சோதி முனிவர் என்று வழங்கப்பட்ட காரணத்தாலே துறவியாக இருந்திருக்க வேண்டுமென்று நினைப்பதோடு சரி.

பொதுவாக தமிழ் இலக்கியத்தில் தோன்றிய எல்லா நூல்களும் கடவுள் வாழ்த்தோடுதான் தொடங்கும். சங்க காலத்துப் பாடல்களுக்கு கடவுள்வாழ்த்து இல்லையென்ற குறையைப் போக்குவதற்காக, பெருந்தேவனார் என்ற புலவர் எட்டுத் தொகையில் காணப்படும் சில நூல்களுக்குக் கடவுள் வாழ்த்து பாடி வைத்திருக்கிறார் பரஞ்சோதியைப் பொறுத்த மட்டில் அவருடைய கடவுள் வாழ்த்து தனிச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. சிவம், சக்தி, பரசிவம், பராசக்தி மீனாட்சி, கூத்தபிரான், தடாதகை, கால் மாறியாடிய பெருமான், நந்தி தேவர், நால்வர், அடியார்கள்-இத்தனை பேருக்கும் வாழ்த்து சொல்கிறார். அது கொஞ்சம் புதுமையானதுதான். அதனை அடுத்து அவை அடக்கம் என்ற பகுதி. அவை அடக்கம் சொல்வதும் தமிழ் நாட்டில் மரபுதான். ‘ஆசைபற்றி அறையலூற்றேன்’ என்று சொல்லுவான் கம்பன். அதற்கு உவமையும் சொல்லுவான். ஒரு பெரிய கடலை ஒரு பூனையானது நக்கிக் குடிக்க வேண்டு மென்று நினைப்பது எவ்வளவு அறியாமையோ, அவ்வளவு அறியாமையுடையது, இராகவன் புகழை நான் பாட வந்தது என்று கம்பன் சொல்லுவான். இது, தமிழ் நாட்டுப் பேரிலக்கியங்களின் மரபுதான். ஆகவே அந்த மரபைப் பின்பற்றித்தான் இவரும் அவை அடக்கம் பாடுகிறார். ஆனால் அந்த அவை அடக்கத்தில் ஓர் அழகு செய்கிறார். இறைவனுடைய திருவிளையாடலைப் பாடுகிறேன், அதனாலே மட்டும் இது சிறப்புடையதென்று கருதிட வேண்டாம்; வேறொரு காரணமும் உண்டு அது சிறப்படைவதற்கு, மதுரையிலே தமிழ் ஆராய்ந்த புலவர்