பக்கம்:அருளாளர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருவிளையாடலும், பரஞ்சோதியாரும்*119

தமிழ் வழக்கு வெல்லுமாறு ஞானசம்பந்தர் தோன்றினார் என்று சொல்லுவர். இந்தக் கருத்தை வாங்கிக் கொண்டு தான் பரஞ்சோதியார், “தீந்தமிழ் வழங்குதிரு நாடது சிறப்ப” என்று பேசுகிறார். பாண்டியனைத் தமிழ்க் கோமான் என்றும் சொல்லுவார். அப்படியானால் பிற மொழி அறியாதவர் என்று தயவு செய்து நினைத்துவிட வேண்டாம். வடமொழிப் பயிற்சி எல்லையில்லாமல் கொண்டவர். மரபுக்கு மாறுபட்ட வகையிலேயும் இதனைக் காட்டுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தடாதகைப் பிராட்டியைத் திருமணம் செய்துகொண்டு சொக்கலிங்கப்பெருமான் அங்கே இருக்கிறார். அவர்கள் இருப்பதைப் பற்றிச் சொல்ல வருகிறார்,

"இணரெரி தேவுந் தானே யெரிவளர்ப் பவனுந் தானே
உணவுகொள் பவனுந் தானே யாகிய வொருவன்"

“இணரெரி தேவுந் தானே”__அக்னி சொரூபமாக இருக்கிறவனும்; “எரி வளர்ப்பவனும்"__யக்ஞத்துக் குரிய அக்னியை வளர்க்கின்றவனாகிய யக்ஞகர்த்தாவும்; “உணவு கொள்பவனும்"__அந்த அவிர் பாகத்தை உண்பவனும்; “தானே யாகிய வொருவன்" __எல்லாமுமாக இருக்கிற பெருமான்;

“புணர்வுறு போக மூழ்கப் புருடனும்
பெண்ணுமாகி மணவினை முடித்தா னன்னான்
புணர்ப்பையார் மதிக்க வல்லார்"__

அப்படிப்பட்ட பெருமான் எப்பொழுதும் உமையொரு பாகமாக இருப்பவன், இப்பொழுது தானும் உமையும் தனித்தனியாக இருக்கின்றானாம். அப்படி இருப்பவன் யார் என்று சொல்ல வரும்போதுதான், “இணர் எரித் தேவனும், எரி வளர்ப்பவனும், உணவு கொள்பவனும் தானே" என்று சொல்லுவார். இது கீதையிலே உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/130&oldid=1292061" இலிருந்து மீள்விக்கப்பட்டது