பக்கம்:அருளாளர்கள்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் 141

தெரியாமல் நடந்துகொள்கிற பாண்டியன்கூட, அந்த ஆற்றலினால் ஈர்க்கப்பட்டு ஏடா என்று தொடங்கி ‘தம்பி’ என்று முடிக்கிறான் என்றால் பரமகருணை உடையவனாகிய இறைவனுடைய சன்னதியிலே மக்கள் தங்களையும் அறியாமல் மேலே ஏற முடிகிறது என்றப் பேருண்மையைக் காட்டுவதோடு, வந்தியைப் போன்று துணையின்றி, இருக்கின்றவர்கள் அனைவருக்கும் பற்றுக் கோடாக இருப்பவன் இறைவன் என்பதையும் காட்டுவதோடு, இழிந்த உயிர்களாகிய பன்றிக் குட்டியில் தொடங்கி, பேரறிவுடைய மாணிக்கவாசகர் வரையிலும், அத்தனை பேருக்கும் இறைவனுடைய கருணை வெள்ளம்போல் கிடைக்கிறது. அதனைப் பயன் படுத்துகிறவர்களுக்கும், அவனுடைய அருமைப்பாட்டை அறிகிறவர்களுக்கும் அந்தக் கருணை கிடைக்கிறதென்ற பேருண்மையைக் காட்டுவதற்காகவும், இறைவனுடைய செளலப்யத்தின் எல்லை எவ்வளவு தூரம் செல்லு மென்பதைக் காட்டவும் திருவிளையாடல் புராணம் அமைந்ததென்றால் அதனை மிகச் சிறந்த முறையில், ஒப்பற்ற தமிழ்ப் பாவினால், கற்பார் உள்ளம் கரைகிற முறையிலே பாடித் தந்த பெருமை பரஞ்சோதியாருக்கு உரியது. ஏனையோர் பாடியிருப்பினும், பரஞ்சோதியார் போன்ற அன்புள்ளம், படைத்து, இறைவனுடைய கருணை வெள்ளத்தில் ஆழ்ந்து, பாடிய காரணத்தால், பரஞ்சோதியார் திருவிளையாடல் இன்றும் உலகம் படிக்கிற முறையில் அமைந்திருக்கிற தென்பதை நாம் அறிய முடிகிறது. ஆகவே ஏனைய பக்தி நூல்களைப் போல திருவிளையாடல் புராணமும் படிக்கப் படிக்க “மலங்கெடுத்து மனங்கரைக்கும்’ என்று திருவாசகத்தைப் பற்றி சொல்லியிருப்பது போல, படிக்கின்றவர்களின் மனம் கரையும் பேராற்றல் உடையதென்பதை அறிகிறோம்.