பக்கம்:அருளாளர்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 * அருளாளர்கள்



காரியத்தைச் சாதிக்க முடியாது. இந்தப் பொறிபுலன்கள் சாதாரண மக்களுடைய பொறிபுலன்கள் போல் அல்லாமல் வலுவுடையனதாக ஆக வேண்டும். அதனையே சைவ சித்தாந்திகள் பசுகரணங்கள் பதி கரணங்களாக மாற வேண்டும் என்று சொல்லுவார்கள். சாதாரண மனிதர்களுக்குரிய கண் மூக்கு செவியாக இல்லாமல் திருவருள் பலத்தினாலே வலுவுடையனவாக இவை ஆகிவிடுமேயானால் அப்போது அவர்கள் மாபெரும் காரியங்களைச் சாதிக்க முடியும். பிறகு அவர்கள் பேசுகின்ற பேச்செல்லாம் மந்திரங்களாக மாறி விடும். அதைத்தான்,

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி-தானே மந்திரம் என்ப... * (தொல்-)

என்று பழமையான தொல்காப்பியம் கூறுகிறது. நிறை மொழி மாந்தர் மந்திரங்களைப் புதியனவாக தோற்றுவித்து மக்களிடையே பரவவிடுவார்கள், இந்தப் பெரியவர்களுடைய பொறிபுலன்கள் வலுவுடையனவாக மாறி இருக்கும். வலுப்பெறுதல் என்றால் ஏதோ நம்முடைய உடல் நிலை வளம் (Physical) பெறுவதைச் சொல்லவில்லை. அத்தகைய வலு தேவையும் இல்லை. இங்கே வலு என்று சொல்லப் பெறுவது பொறிபுலன்கள். அவை எந்த ஒன்றுக்காக படைக்கப்பட்டனவோ அந்த ஒன்றை நாடிச் செல்ல வேண்டிய வலுவையே குறிக்கும். இந்த வலுவைப் பெறுவதற்கு முன்னர் கூறிய இறை தரிசனம் (விக்கிரக வழிபாடு) தேவைப்படுகிறது என்பதை நாம் அறிய முடிகிறது. இந்த முறையில் வள்ளலார் வாழ்க்கை வளர்ந்து வருவதைப் பார்க்கிறோம். ஆரம்பத்தில் இருந்தபடியே வரன்முறை பற்றி, மரபுபற்றி, சம்பிரதாய ரீதியிலே போய் அவர் இறுதிவரை பாடியிருப்பாரேயானால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/201&oldid=1291967" இலிருந்து மீள்விக்கப்பட்டது