பக்கம்:அருளாளர்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி : 197

உணர்வோடு சேர்த்து இத்தொண்டை செய்திருக்கிறார்கள். அதற்கும் ஒரு வலுவான காரணம் உண்டு. "இறையுணர்வு இல்லாமல் இந்தத் தொண்டைச் செய்வோமேயானால் அதில் மாபெரும் குற்றம் ஏற்பட்டுவிடும்". அது என்ன வென்றால் வசதியுடைய ஒருவன் தினம் நூறு பேர்களுக்கு உணவு அளிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். சில காலம் கழிந்தவுடனே அவனையும் அறியாமல் அவன் உடைய மனத்திலே ஒரு செருக்குத் தோன்றிவிடும். நான் இதைச் செய்யவில்லையானால் இந்த நூறு பேரும் என்ன பாடுபடுவார்கள் என்ற நினைவு தோன்றிவிடும். ஆகவே, இந்த நூறுபேரும் என்னாலே வாழ்கின்றார்கள் என்ற நினைவு அவனையும் அறியாமல் தோன்றிவிடும், "இறை அன்பு இல்லாமல் இத்தொண்டு செய்கிறவர்களுக்கு இத்தகைய அகங்காரம் வந்தே தீரும்". அது உணவு போடுகின்ற தொண்டாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் தொண்டாக இருந்தாலும் சரி. "தொண்டு செய்கின்றவர்கள் இறையுணர்வு இல்லாதவர்களாக இருப்பார்களேயாகில் அந்தத் தொண்டு பெரும் துன்பத்தைத்தான் உண்டாக்கும்". அவர்களை பெரிய அகங்காரம் உடையவர்களாக ஆக்கிடுவதால் அவர்களது உதவியைப் பெறுகின்றவர்கள் இவனிடத்தில் போக வேண்டியிருக்கிறதே என மனம் நோகும்படியான ஒரு சூழ்நிலையை உண்டாக்கிவிடும். ஆகவேதான் நம்முடைய நாட்டிலே தோன்றிய பெரியவர்கள் தொண்டு செய்கின்றவர்கள் எத்தகைய தொண்டு செய்தாலும் இறையுணர்வின் அடிப்படையில் தான் அதைச் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். "வறுமை யுடையவர், முதியவர், இளையவர் என்ற வேறுபாடே பாராட்டாமல் இறைவன் உறைகின்ற கோயில், இறைவன் உறைகின்ற உடம்பு அது" என்று நினைத்து அந்த உடம்புக்கு வருகின்ற பசியைப் போக்க வேண்டுமென்ற கட்டுப்பாட்டைச் செய்தார்கள். இவையெல்லாம் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/208&oldid=1291961" இலிருந்து மீள்விக்கப்பட்டது