பக்கம்:அருளாளர்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 * அருளாளர்கள்



சொல்லுகின்றோம். அப்படி இல்லாமல் தாம் அதனைப் போக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றால் அதற்குரிய காரணம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மனித சமுதாயம் எங்கிருந்தாலும் செல்வமும் வறுமையும் ஒன்றாகவே இணைந்திருந்தன என்றாலும் மனிதர்கள் பசியால் வாடுவது பொறுத்தற்கரிய துன்பமாகும். தான் வாழ்கின்ற சமுதாயத்தில் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பசியால் வருந்தாமல் ஆவன செய்ய வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும். இதனை மனத்தில் கொண்ட வள்ளலார் தர்மசாலை என்ற ஒன்றை நிறுவினார். அந்தச் சாலையில் உள்ள அடுப்பு என்றும் அணையக் கூடாது என்றும் ஆணையிட்டார். அதாவது எப்பொழுதும் உணவு தயாரித்துக் கொண்டே இருக்கவேண்டும். யார் எந்த நேரத்தில் வந்தாலும் உணவு வழங்கப்பட வேண்டும் என்று கருதித்தான் தர்மசாலை அமைக்கப் பெற்றது. தர்மசாலைக்கு வேண்டிய அரிசி முதலானவற்றை அன்பர்கள் ஓயாமல் வழங்கி வந்தனர். தேவைபடும் பொழுது வண்டி ஒன்றை அவ்வூரின் உள்ளும் பக்கத்து ஊர்களிலும் வலமாகச் செல்லுமாறும் செய்வித்தார். காலியாக புறப்பட்ட வண்டி வழிய உணவுப் பொருளை ஏற்றிக் கொண்டு திரும்புமாம். இன்றும் அந்த வண்டி உள்ளது. தேவை ஏற்படும்பொழுது அந்த வண்டி அனுப்பப் பெறுகிறது. அது நிரம்பி வழியும் வகையில் உணவுப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு இன்றும் அது வருவதைக் காணலாம்.

இனி அடுத்தபடியாக ஒரு மாபெரும் தத்துவத்தையும் காண முடிகின்றது. பிற உயிர்கள் துன்பப்பட்டால் அதனைப் போக்க வேண்டுமென்று இவர்கள் ஏன் நினைக்கின்றார்கள் என்பது ஆராய்ச்சிக்குரிய ஒன்றாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/213&oldid=1285868" இலிருந்து மீள்விக்கப்பட்டது