வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 203
நம்மைப் போன்ற சாதாரண மக்கள் பிறருடைய துயரில் பங்கு கொள்கிறோம் என்று சொல்லி ஏதோ அவர்கள் நோய்வாய்ப் பட்டிருக்கும்போது சில பழங்களை வாங்கிக் கொண்டு சென்று அவர்களுக்குக் கொடுத்துவிட்டு வருவதனாலோ அல்லது அவர்களுடைய நிலை என்ன என்று விசாரிப்பதனாலோ பங்கு கொண்டதாக நினைக் கின்றோம். இதைத் தமிழர்கள் என்றைக்குமே ஏற்றுக் கொண்ட தில்லை. திருவள்ளுவர் தான் முதன் முதலாக இதற்கு இலக்கணம் வகுக்கின்றார்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக் கடை (குறள்-315) என்கிற குறளுக்கு பரிமேலழகர் உட்பட யாரும் சரியாக உரை கண்டதாகச் சொல்ல முடியாது. பிற உயிர் களுடைய நோயைப் போக்க வேண்டுமென்று நினைக்கின்றவன் ஏதோ சில சமாதான வார்த்தைகளைச் சொல்வதனாலே நிச்சயமாக அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது. அப்படியானால் பிறகு என்ன செய்ய முடியும்? பிறருடைய நோயை நாம் பங்கிட்டுச் கொள்ள முடியுமா? பிறருக்கு வந்த வயிற்று வலியை நாம் பெற்றுக்கொள்ள முடியுமா? என்றால் நிச்சயமாகப் பெற முடியாது. ஆனால் வயிற்று வலியினாலே அவதிப்படுகின்றவர் எந்தத் துன்பத்தை அனுபவிக்கின்றாரோ அந்தத் துன்பத்தை தாம் ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டுமென்பது தான் அந்தக் குறளுடைய பொருளாகும்.
பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக் கடை என்பது, அந்த நோய் வந்தவர்கள் எந்தத் துன்பத்தை அனுபவிக்கின்றார்களோ அதே துன்பத்தை நாமும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் அடிப்படைத் தத்துவமாகும். இக்கருத்தையே வள்ளலார்,