பக்கம்:அருளாளர்கள்.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 219

படும் பொருள் ஒளிவடிவானது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அதேபோல எல்லாச் சமயவாதிகளும், இறைவன் என்று அவர்கள் எந்தப் பொருளைச் சொல்லுகிறார்களோ அது கருணை வடிவானது என்பதை ஒத்துக் கொள்கிறார்கள். விக்கிரத வழிபாடு வேண்டுமென்று சொல்லுகிறவர்கள், வேண்டாம் என்று சொல்லுகிறவர்கள், கூடவே கூடாது என்று சொல்கிறவர்கள், பொருள் ஒன்றே என்று சொல்லுகிறவர்கள் அத்தனை பேரும் அந்த ஒரு பொருள் ஒளிவடிவானது என்பதை மறுப்பதே இல்லை. அதேநேரத்தில் குறிகுணம் இல்லாததாகிய அந்தப் பொருளுக்கு ஏதாவது ஒரு குணத்தைக் கற்பிக்க வேண்டுமென்றால் அது கருணையே வடிவானது என்பதை இவர்கள் யாரும் மறுப்பதில்லை. ஆக இத்தனை சமயங்களையும் புகுந்து பார்த்த வள்ளற்பெருமான் பொதுத்தன்மை என்று இரண்டை வெளியே எடுத்துக் கொள்கிறார். ஒளி, கருணை என்ற இரண்டும் எல்லாச் சமயவாதிகளும் ஏற்றுக் கொள்கின்ற கடவுள் இலக்கணம் ஆகும். ஆகவே கடவுள் என்று பெயர் சொன்னாலோ, சிவன் என்று பெயர் சொன்னாலோ, திருமால் என்று பெயர் சொன்னாலோ, பிதா என்று பெயர் சொன்னாலோ அல்லா என்று பெயர் சொன்னாலோ குறிப்பிட்டவர்களைச் சார்ந்துவிடும். அப்படிச் சொல்லாமல் ஏதோ ஒரு அடிப்படையில் இத்தனை பேரையும் ஒருங்கிணைக்க ஒரு மாபெரும் முயற்சியைத் தொடங்கி,

          அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
          தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

என்ற ஒரு தாரக மந்திரத்தை வாழ்க்கை நெறியாக வகுத்துக் கொடுத்தார். இது புதிதல்ல. ஒளி என்று சொல்லுவது திருமுருகாற்றுப்படைக் காலத்தில் இருந்தே வருகிறது.