பக்கம்:அருளாளர்கள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் 61

அவ்வாறாயின உருவில்லாத அப்பொருளை உருவுடைய இவர் எங்ஙனம் கண்டார் என்ற வினாத் தோன்றும். காண்டல் இருவகைப்படும். ஒன்று கருத்தாற் காண்டல், ஏனையது கண்ணாற் காண்டல். இப்பெருமான் கண்ணாலுங் கண்டதாகக் கூறினமையின் கருத்தாற் கண்டது சொல்ல வேண்டா. இனிக் கண்ணாற் காண்பதற்குரிய வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது என்பார்க்கு-விடை கூறுவார் போன்று ஆழ்வார்,

“துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி

  நின்ற வண்ணம் நிற்கவே,  துயரில் மலியும் மனிசர் பிறவியில்
 தோன்றிக்கண் காண வந்து துயரங்கள் செய்து, தன் தெய்வநிலை 
             உலகில்
  புக உய்க்கும் அம்மான். . . .
          (நாலா:2408)

என்று பாடிச் செல்கிறார். அடியார்கள் அன்புடன் வேண்டும்பொழுது இறைவன் தன்னுடைய பரம கருணையின் காரணமாக மானுட வடிவந்தாங்கி வந்து காட்சி நல்குகிறான். இதே போன்று மணிவாசகரும்,

 ‘வான்பழித்து இம்மண் புகுந்து 
  மனிதரை ஆட்கொண்ட வள்ளல்’
       ( திருமுறை: 8, 18, 4)

என்று கூறுவார். அவ்வாறு இறைவன் மானுட வடிவந்தாங்கி வருதல் என்பது நம்முடைய தகுதி நோக்கி அன்று என்றும் அவனுடைய கருணை காரணமாகவே என்றும் கூற வந்த பெரியார் 'ஆட்கொண்ட வள்ளல்’ என்ற சொற்களால் அக்கருத்தைப் பேசுகிறார்.