பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

15

அருள்நெறி முழக்கம்


உடலில் நோய் ஏற்பட்டால் அதனை நீக்க வேண்டும் அல்லவா? மக்கட்சமுதாயம் ஓர் உடல்போல. அந்த உடலில் நோய் ஏற்பட்டு விட்டால் அதற்குத் தகுந்த மருத்துவம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த உடலில் பல்வேறுபட்ட வியாதிகள் பெருகிக் கொண்டே போய் முடிவில் உடலே அழிந்து இருந்த இடங்கூடத் தெரியாமல் போய்விடும்.

கண்ணன் பிறந்ததன் மூலமாகத்தான் துரியோதனன் அழிந்தான். அது நோய் நீக்கத்திற்குக் கொடுத்த மருந்து போலத்தான். அந்த மருந்தினை வேண்டாம் என்றால் - வெறுத்து ஒதுக்கினால் - சாப்பிட மாட்டேன் என்று சொன்னால் - இதனைச் சாப்பிட்டால் நோய் நீங்கும் என்று தெரிந்தும் அதனை உண்ணேன் என்று பிடிவாதம் செய்தால் அவர்களை என்ன என்று சொல்வது! நோய் நீக்கம் வேண்டியதில்லை. நோய் இருந்து கொண்டே இருக்கட்டும். அந்த நோய் வளர்ந்து கொண்டே போய் இந்த முழு உடலையும் அழிக்கட்டும் என்று தான் கூறுகின்றார்கள் என்று எண்ண வேண்டியிருக்கின்றது.

கண்ணனுடைய கீதை அவன் காட்டுகின்ற வழி மக்கட் சமுதாயம் உய்வதற்குரிய சிறந்த தானம் என்பதை அனுபவம், ஆராய்ச்சி, உண்மைக் கண்கொண்டு பார்த்து உணர்கின்ற திறனுடைய மக்கள் தான் புரிந்து கொள்வார்கள். இதனைத்தான், சென்னை முதன் மந்திரி இராஜாஜி அவர்கள் “வழிகாட்டி" என்ற தலைப்பில் அழகுபட எழுதியிருக்கின்றார். “பலனில் பற்றின்றிச் செய்க" என்று கூறியதிலிருந்து மக்கட்சமுதாயம் சேவையைப் பெரிதாகக் கருதிப் பணியாற்ற முன்வருதல் வேண்டும். சேவையில் இறங்கிப் பணியாற்றுகின்ற காலத்து அந்தப் பணிக்காக எதையும் எதிர்பார்த்துச் செய்தல் கூடாது. இந்த ஒப்பற்ற சூழ்நிலை சமுதாயத்தில் உண்டாக வேண்டும். ஆக்க வேலைகளில் சேவை அதிகம் காண வேண்டும். நாம் செய்ய முனைகின்ற பணிகள் - சேவைகள் அனைத்தும் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும். அந்தப் பணி செய்கின்ற காலத்து நாம் எவருடைய உதவியையும்