பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

23

அருள்நெறி முழக்கம்


இலக்கியம் கண்ட இன்பப் பெருநாடு இதுதானா என்ற சந்தேகம் உண்டாகின்றது. வேறு ஒரு தமிழகம் - பாரதி கண்ட தமிழ்நாடு எங்கேனும் இருக்கின்றதா என்ற ஐயப்பாடு உண்டாகின்றது. அற்றைத் தமிழகத்தில் வான் வற்றாத மழையைப் பொழிந்த காரணத்தால் எங்கும் வளமான ஆட்சியைக் காண முடிந்தது. இன்று அதற்கு நேர்மாறாக ஆறுகள் எல்லாம் பாலைவனமாகக் காட்சி அளிக்கின்ற, பழந்தமிழகத்தைப் படித்தும் இற்றைத் தமிழகத்தின் நிலையைக் கண்கூடாகக் கண்டும் அதனை மாற்றி அமைக்க முடியவில்லை. வாழ்ந்த தமிழகம் வீழ்ந்ததன் காரணம் என்ன? ஏன் இந்த நிலை? சிந்தித்துப் பாருங்கள்!

ஆழ்ந்ததொரு சிந்தனைக்குப் பின் இத்தகைய நிலை ஏற்பட்டதன் காரணம் நாட்டில் கல்வி நிலையங்கள் நல்லனவாகக் காட்சி அளிக்காதிருப்பதுதான் என்று நன்கு தெரியும். அறிவியல் வளரத் தொடங்கிற்றே அன்றி, அருளியல் வளரவில்லை. அறிவும் ஆராய்ச்சியும் எந்தவிதப் பயனையும் தர முடியாது. அறிவியலில் அருளியல் கலக்க வேண்டும். அருளியல் கலவாத அறிவியல் அழிவைத்தான் தரும். விவசாய முறையிலும் எத்தனையோ அறிவியல், கலக்கப்பட்டு விட்டது - புகுத்தப்பட்டு விட்டது. எனினும் பழந்தமிழகம் கண்ட விளைச்சல் இல்லை. பழந்தமிழ் உழவர் கையாண்ட- கையாண்டு பலன்கண்ட தழைகளுக்குப் பதில் அமோனியம் சல்பேட் உபயோகப்படுத்தியும், ஜப்பானிய விவசாய முறையைக் கையாண்டும் சமுதாயத்திற்கு வேண்டிய உணவு கிடைத்தபாடில்லை. மக்களின் அறிவு பெருகிற்றே ஒழிய தேவை பூர்த்தியானபாடில்லை. ஆராய்ச்சி பெருகிற்றே ஒழிய அதனால் பலன் ஒன்றுமில்லை.

இன்றைய சமுதாயத்தில் அருளியலைத் தவிர எல்லாம் பெருகின. உடம்பில் உறுப்புக்கள் அனைத்தும் இருந்தும் உயிர் இல்லை என்பது போலத்தான் இருக்கிறது. உயிர் இல்லாத உடம்பினால் என்ன பயன்? அறிவும் ஆராய்ச்சியும் பயன்தர முடியாது. அறிவிற்கு ஒர் எல்லை உண்டு என்பதை யாரும் மறந்து