பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

25

அருள்நெறி முழக்கம்


இன்றைய இளைஞர்கள்தாம் நாளைய நாட்டின் தலைவர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இன்றைய இளைஞர்கள் தாம் நாளைய தமிழகத்தை - நல்லதொரு நாட்டை - உருவாக்கப் போகின்றவர்கள். அவர்களை நல்லவர்களாக ஆக்கும் பொறுப்பு கல்வி நிலையங்களுக்குத்தான் உண்டு. சமயக் கல்வி இல்லாத கல்வி மக்கட் சமுதாயத்தில் தீமை பெருகவே துணை செய்யும். நம் எண்ணத்தின் எதிரொலியின் வழிதான் நம் வாழ்வு. நாம் நல்லனவற்றை எண்ணினால் நாம் நலமுடன் வாழ முடியும். நமது எதிர்காலச் சமுதாயம் இன்பமுடன் வாழவேண்டுமானால் வான் வற்றாத மழையைப் பொழிந்து வளம்பெருகி வாழவேண்டும் என்று ஆசைப்படுவோமானால் 'பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே' என்ற உயரிய கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தால்தான் நலம் காண முடியும்.

“இனவெறி மக்கட் சமுதாயத்தைக் கெடுக்கும் நஞ்சு"; “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்” என்று உலகிற்கு உணர்த்தியது யார்? தமிழ்நாட்டுச் சமயப் பெரியார்கள்தான். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று உலகம் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை - உயரிய கொள்கையைப் பரப்பியது யார்? தமிழ்நாட்டுச் சமயப் பெரியார்கள்தான் என்றால் யாரும் அதனை மறுக்கவோ மறக்கவோ முடியாது. இன்றல்ல - நேற்றல்ல - மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த உயரிய கொள்கையைச் சமயம் கண்டது. அன்றைய மக்கட் சமுதாயம் அதன்வழி வாழ்ந்து இன்பம் பெருக்கெடுத்தோடக் கண்டார்கள்.

இன்று நாம் பழமையைப் புறக்கணித்துப் புதுமையை வளர்க்க முற்படுகின்றோம். பழமையின்றிப் புதுமை இயங்க முடியாது. இயங்கினாலும் நல்லதொரு காரியத்தைச் சாதிக்க முடியாது. இதுவரை அப்படிச் சாதித்ததாகத் தெரியவில்லை. சாதித்தவை ஒன்று இரண்டு இருக்குமேயானால் அவை அழிவான முடிவைத்தான் தந்திருக்குமே அல்லாது நல்லனவாக இருக்க முடியாது. புதுமையை வளர்க்கும் காலத்து அதன் தாயகமான