பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

44

அருள்நெறி முழக்கம்


நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் எக்காலத்தும் உங்கள் வாழ்நாளில் வெறுப்பிற்கும் - வெறிக்கும் ஆளாகி விடாதீர்கள். வெறுப்பும் வெறியும் மக்கட்சமுதாயத்தைக் கெடுத்து விடும். அது மக்கட் சமுதாயத்தின் துரோகி என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. மாற்றெண்ணம் கொண்டு அறிந்தோ அறியாமலோ அவர்கள் நம்மை எது கூறினாலும் அதனைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் கூறுகின்ற அனைத்தும் அன்பின் வாழ்த்து வேறு விதத்தில் நம்மை நாடி வருகின்றது என்று எண்ணுங்கள். அந்த எண்ணந்தான் நம்மை அன்புடையவர்களாக என்றென்றும் வாழ்விக்கும்.

நாம் அன்புடையவர்களாக வாழ்ந்தால்தான் நாடும் அன்புடை நாடாக வாழமுடியும். மாற்றெண்ணங்கொண்டு அவர்கள் கூறுகின்ற அனைத்தும் நம்மை அல்ல.ஆக்கவும் காக்கவும் வல்ல அனைத்திற்கும் மூலகாரணமாக இருக்கின்ற கடவுளைத் தான் கூறுகின்றார்கள் என்று நம்புங்கள். அந்த உயரிய நம்பிக்கை தான் நம்மையும் நானிலத்தையும் வாழ்விக்கும்.

பிள்ளையார் உடைப்புச் செய்தவர்கள் யார் என்று சிந்தித்துப் பார்த்தால் நன்கு தெரியும். அவர்கள் நமது சாக்கிய நாயனார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். சாக்கியனார், தனது மதத்திற்குத் தெரியாமல் இந்துமதத்தில் பற்றுக் கொண்டு சமயக் கொள்கையில் பற்றுக் கொண்டு நமது திருவுருவங்களை அன்புடனும் அருளுடனும் வழிபட்டு வந்தனர். அதுபோலத்தான் இன்றைய பிள்ளையார் உடைப்புக் கட்சிக்காரர்களின் போக்கும் போய்க் கொண்டிருக்கின்றது.

இதுநாள்வரை உருவவழிபாடு கூடாது என்று கூறிய நாம் இனிக் கடவுள் வழிபாட்டை மேற்கொண்டால் உலகம் நம்மை நிலையில்லாதவன் என்று தூற்றுமே நாம் நமது அன்பை ஆண்டவனிடம் உடைப்பின் மூலமாகத்தான் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் பிள்ளையார் உடைப்புத் தொழிலை