பதிப்புரை
அருள்நெறி முழக்கம்! இருள்படர்ந்த தமிழகத்தில் உதய ஒளிக்கீற்றாய் உலாவந்த அருள்ஞான உரைகளின் தொகுப்பு! உதய ஞாயிற்றுக்கு வரவு கூறிய புரட்சியின் புதிய பூபாளங்கள்! நாத்திகத்தின் நெருக்கடியால் சனாதனம் சரிந்து விழுந்தபொழுது உண்மையான ஆன்மிகத்தை உயர்த்திப்பிடித்த ஆன்மிக உயிர்த்துடிப்பு! கோலத்தாலும் உள்ளத்தாலும் துறந்த துறவுச்சிங்கத்தின் கர்ஜனை காற்றில் கரைந்த கற்பூரமாய்க் காணாமல் போய்விடாமல் வரலாற்றுக் கல்வெட்டாய்ச் செதுக்கும் முயற்சிதான் தங்கள் கரங்களில் தவழும் அருள்நெறிமுழக்கம் என்ற இந்த சீரிய சிந்தனை நூல்! வரலாற்றைப் படைத்தவரை வரலாறாய் வாழ்ந்தவரின் வார்த்தைகளே வருங்கால வரலாற்றுக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையில் முகிழ்த்ததுதான் அருள்நெறி முழக்கம் எனும் இந்நூல்!
தம் ஊனில் உயிரில் மகாசந்நிதானம் எண்ணிப் பார்த்த இலட்சிய, சமய, சமுதாயத்தினைப் படைக்க விரும்புவதே இந்நூலின் நோக்கம்! மகாசந்நிதான்த்தின் உரைகளின் வாயிலாகக் கடந்த காலத் தமிழகத்தின் சமய, சமுதாய வரலாறு ஊடும் பாவுமாக இழையோடியிருப்பதை உணர முடிகின்றது. பிரார்த்தனையைப் பாருங்கள்! ஆசைகளின், அபிலாஷைகளின் கூடங்களாக வழிபாட்டு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இதுவா நம் பிரார்த்தனை? சிவபூசையினால் ஏதாவது நன்மை உண்டாகுமேயானால் அதைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளாமல், 'ஆண்டவரே நீயே ஏற்றுக் கொள்வாயாக!' என்று சைவசமயக்குரவர்கள் கூறிச் சென்றது பூசை தொண்டு இவற்றின் பயன் தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்ற பற்றற்ற, பற்று நிலையில்தான்! பாரதி கடவுளிடம் வேண்டிய பிரார்த்தனை பொதுநலம், உலக உயிர்க்குல நாட்டம் சார்ந்தது. அப்படிப் பிரார்த்தனை அமைய வேண்டும் என்று மகாசந்நிதான்ம் கூறுவது நனவாக வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை!