பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.தவத்திரு குன்றக்குடி அடிகளார்

49

அருள்நெறி முழக்கம்


என்று கொண்டுவரப்படுகின்றதோ அன்றுதான் காந்தியடிகள் கண்ட நாட்டிற்கு அடிகோலியவர்களாவோம்.

காந்தியடிகள் கண்ட நாட்டை அமைத்தால்தான் நாமும் - பிற்காலச்சந்ததியார்களும் இன்புற்று வாழ முடியும். மேலும் உலகப் பெரியாரின் பொன்மொழியைக் காப்பாற்றிய - இலட்சியத்தை நிறைவேற்றிய பெருமையும் நம்மைச் சேரும்.

காந்தியடிகள் கண்ட நாட்டைக் காண எல்லோரும் பிரார்த்தனையைக் கைக்கொள்வோமாக.

மக்கட் சமுதாயத்தில் பிரார்த்தனை என்று வளம் பெறுகின்றதோ அன்றே இயற்கையும் வளம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. பிரார்த்தனைதான் அண்ணல் காந்தியடிகளின் மருந்து.

அண்ணல் காந்தியடிகள் நோயுற்றிருந்த காலத்து உடனிருந்த அனைவரும் மருத்துவரை அழைத்து வர எண்ணினர். அவர்களின் எண்ணத்தை அண்ணல் காந்தியடிகளிடம் தெரிவித்தனர். அதற்கு அண்ணல் காந்தியடிகள், “என்னுடைய உயிரை இந்த மருத்துவர்களால் காப்பாற்ற முடியாது. காப்பாற்றக் கூடிய ஒரு மருத்துவன் இருக்கின்றான். அவனை அழையுங்கள். அவன் நினைத்தால்தான் முடியும். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. ஆக்கவும் காக்கவும் வல்ல மாபெரும் சக்தி அவனுக்குத்தான் உண்டு. ஆதலால் நீங்கள் எல்லோரும் உலகின் நலம் கருதிப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினார். அண்ணல் காந்தியடிகள் பிரார்த்தனையை வலியுறுத்திக் கூறுங்காலத்து, "என்னால் பல நாள் உணவின்றி இவ்வுலகில் வாழ முடியும். ஆனால் ஒருநாட்கூடப் பிரார்த்தனையின்றி வாழ முடியாது” என்று கூறினார்.

நாம் அனைவரும் உளந்தோய்ந்த பிரார்த்தனையுடன் ஆண்டவனை வழிபட்டால் அவன் உறுதியாக நமக்கு வாழ்வளிப்பான் என்பதில் சந்தேகமில்லை.