தமிழரசுக் கழகத்தினர் ஆதரவில் நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
தமிழன் புதுமைக்கும் புதுமையானவன்; பின்னைப் பழமைக்கும் பழமையானவன். அவனது வாழ்வு எவ்வளவு உயர்ந்திருந்தது - அவன் எத்தகு பீடும் பெருமையும் சீரும் சிறப்புங் கொண்டு வாழ்ந்து வந்தான் என்பது மொழியிலக்கணத்தின் அடிப்படையில் கலாசாரத்தின் அடிப்படையில் எழுந்த நல்ல பல தமிழிலக்கியங்களை உண்மைக் கண்கொண்டு படித்துணர்ந்து சிந்தித்துப் பார்த்தால் நன்கு புலப்படும்.
தமிழரிடையே இடைக்காலத்தில் ஏற்பட்ட உறக்கத்தால் காலத்திற்கும் கருத்திற்கும் ஒவ்வாத சில மாறுதல்கள் காணப்பட்டன. அத்தகு மாறுதல்கள் தமிழினத்திற்கே இழிவு தரும் நிலையிலிருக்கின்றன. பண்டைத் தமிழ் மகன் அனைத்திலும் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்தான் என்பதைப் படித்தும் அறிந்தும் நாம் வாளாவிருக்கின்றோம்.
இமயத்திலே தமிழ்க்கொடியைப் பறக்கவிட்ட தமிழினம் - போரிலே வென்று கனகவிசயர் தலைகளில் கல் சுமக்கச் செய்து அந்தக் கல்லால் கண்ணகிக்குக் கோவில் எடுத்த தமிழினம் இன்று நம் நாட்டின் எல்லையைக் கூட இழந்து எல்லைக் குழுவினரின் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கின்றது. ஏன்? இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தனக்கே உரித்தான் தனதிருப்பிடத்தையும்