பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

57

அருள்நெறி முழக்கம்


நிறைந்து நாட்டின் நலங்கருதி - சமுதாயத்தின் நலங்கருதி - சமயத்தின் நலங்கருதி நல்லதொரு தொண்டாற்ற முன்வரல் வேண்டும். நாட்டின் நலங்கருதுந் தொண்டர்கள் தமிழரசுக் கழகத்தில் அதிக இடம்பெற வேண்டுமென்று விரும்புகின்றோம்.

தமிழர்கள் பண்டொரு காலத்தில் பீடுடன் வாழ்ந்தார்கள். நாகரிகத்தின் உச்சநிலையில் வாழ்ந்து உலகிற்கு உணர்த்தியவர்கள் தமிழர்கள். இமயத்திலும் கங்கை வெளியிலும் கடாரத்திலும் கன்னித் தமிழொலியை ஒலித்து ஒப்பற்ற புகழுடன் வாழ்ந்தனர். தமிழர்கள் நாட்டின் எல்லை ஒருகால் கங்கை நாடு; மற்றொரு கால் இமயப் பனிவரை. இமயத்தின் உச்சியில் தமிழ்க்கொடி பறந்தது ஒரு காலத்தில். தமிழ்ப் பெருங்குடியினர் கருத்தெல்லை என்றும் உலக எல்லையாகவே இருந்து வந்திருக்கிறது.

இங்ஙனம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே ஓங்குயர் கீர்த்தியுடன் வாழ்ந்த தமிழினத்தார் காலப்போக்கிலே தளர்வெய்தினர். ஒன்றுபட்டிருந்த தமிழ்க்குலம் ஜாதியின் பெயராலும், சமயத்தின் பெயராலும் சிதறுண்டது. வலியும், பொலிவும் இழந்து நாமமது தமிழரெனக் கொண்டு ஊமையராய்ச் செவிடர்களாய் வாழத் தலைப்பட்டனர். அவர்தம் நாடும் சீரழிந்தது. நாகரிகமும் நலிவெய்தியது. இன்பத் தமிழும் இருப்பிடந் தேடலாயிற்று. தேய்ந்த தமிழகத்தின் எல்லையில் வடவேங்கடத்திற்குக் கூட இல்லை இந்தச் சென்னை நகருக்குக்கூட ஆபத்து ஆந்திர சகோதரர்களால் ஏற்படுகின்ற அளவிற்குத் தமிழரது உறக்கம் நீடித்து விட்டது. உறக்கத்திற்கும் ஒரு விடிவுகாலம் வரத்தானே வேண்டும்! தமிழர்களைப் பேருறக்கத்தினின்றும் தட்டியெழுப்பி ஆக்கத்துறையில் அன்புடன் அழைத்துச் செல்லும் தமிழரசுக் கழகத்தினரை வாழ்த்துகின்றோம்.

நாட்டில் இன்றைய நிலையைப் பொறுத்துச் சில தலையான பிரச்சினைகளைப் பற்றிக் கூறத்தான் வேண்டியிருக்கின்றது. தமிழுக்காகவும் தமிழ் நாட்டிற்காகவும் வாழ்ந்து நல்ல பல செய்ய வேண்டிய ஓர் ஒப்பற்ற தலைவரை இன்று நாம்