தவத்திரு குன்றக்குடி அடிகளார்
61
அருள்நெறி முழக்கம்
அந்நூல்கள் புத்தக உருவில் இருக்க முடியுமல்லாது, மக்கள் வாழ்வில் நலங்காணச் சிறிதும் பயன்பட மாட்டா. வெறும் புலமையால் இயற்றப்படுவது காப்பியமாகாது. புலமையுடன் அருள் உள்ளமும் கலக்கப் பெற்றால்தான், அன்னார் காப்பியங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும். இரண்டும் கலக்கப் பெறாத காப்பியங்கள் காலப்போக்கில் மறைந்தொழியும்.
சிலப்பதிகார ஆசிரியர் பெரும் புலமையும், ஆராய்ச்சியும் அனுபவமும், அருள் உள்ளமும் கனிந்து விளங்கிய பெருமகனார். இளங்கோவடிகள் தந்த சிலப்பதிகாரக் காப்பியத்தில் முத்தமிழும் நடம் புரியும். இதற்கு இணையான முத்தமிழ்க் காப்பியம் ஒன்று இன்றுவரை தமிழர் கண்டிலர். சிலப்பதிகாரப் பெயர்க் காரணத்தை ஒவ்வொரு தமிழனும் நன்குணர்தல் வேண்டும்.
ஒருநூலைப் பயிலத் தொடங்குமுன், அந்நூற் பெயர்க் காரணம், நூலின் முன்னுரையாகியவற்றை நன்கு பயின்று நூலுட் புகுந்தால்தான் உண்மைப் பொருள் விளங்கும்.
“ஊழ்வினை உருத்துவந் தூட்டும்;
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்;
அரசியல் தவறியவர்க்கு அறமே கூற்றாம்”
என்னும் கொள்கைகளை வற்புறுத்தவே சிலப்பதிகாரம் எழுந்தது என ஆசிரியர் கூறியிருக்கின்றார். சிலப்பதிகாரத்தின் உயிர்நாடி சிலம்புதான். சிலம்பொன்றைக் கொண்டு ஒரு பெருங்காப்பியம் முடித்துத்தந்த பெருமை இளங்கோவுக்கு உண்டு.
பண்டை இலக்கியங்களைப் படித்துப் பார்க்காதவர்கள் - படித்தும் உணர்ந்து கொள்ளத் திறனற்றவர்கள் உணர்ந்தும் சொல்வாதம் புரிகின்றவர்கள் ஆகிய வகையினரே அவைகளைப் பற்றிக் குறை கூறுகின்றார்கள். “அனுபவிக்கத் தெரியாதவன் குறைகூற முனைகின்றான்” என்றான் ஒரு அறிஞன். இன்றைய மக்கட் சமுதாயம் தவறான பாதையிற் செல்கின்றது. இற்றைப் பகுத்தறிவுவாதியர் கொண்டுள்ள மாற்றெண்ணத்தால் விளைகின்ற செயல்களை எண்ணும்பொழுது நம்மையும் அறியாது