உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

79

அருள்நெறி முழக்கம்


நிலையிலே அமைந்திருத்தல் வேண்டும். இங்ஙனம் இருக்கும் நாட்டில், கவலையற்ற இன்ப வாழ்வும் பூரண அமைதியும் நிலவும் என்பதை, “யாண்டு பலவாக நரையிலவாகுதல்” என்று தொடங்குகின்ற புறப்பாட்டு விளக்குகின்றது. தமிழிலக்கியம் காட்டுகின்ற மற்றொரு பண்புநெறி இன்னாதன செய்தாருக்கும் இனியவே செய்தலாம். கேளிர்போல பயின்றோர் நஞ்சு கொடுப்பினும், உண்பர் நனிநாகரிகர் என்று பேசுகிறது தமிழ் இலக்கியம். இப்பண்பாட்டிதைதான் நமது திருவள்ளுவனார்,

“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”

என்று கூறி விளக்குகின்றார். உலகம் ஒன்றையே சார்ந்திருக்கின்றது. அந்தச் சார்பு பற்றியே நிலைபெற்றும் இருக்கிறது. அந்த ஒன்றுதான் பண்பாடு. பண்பாடற்ற நிலையில் மக்கள் வாழும் உலகு இருப்பதைவிட அழிவதே நல்லது என்பது திருவள்ளுவர் கருத்து.

“பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்”

என்பது திருக்குறள். இங்ஙனம் தமிழிலக்கியங்கள், பரந்துபட்ட - விரிந்த நோக்கத்தையும் - ஒப்புரவுப் பண்பையும் வளர்த்து மக்களினத்தையும் அமைதியும் இன்பமும் நிறைந்த - பண்பாட்டிற் சிறந்த பெருவாழ்வு வாழத் துணை செய்து நிற்கின்றன.

இலக்கியமும் கடவுள் நெறியும்

தமிழ்ப் பெருமக்களது அறிவு, உணர்ச்சி, தெளிவு முதலியன குறைவறப் பொருந்திய வாழ்க்கையின் அனுபவத்தினின்று எழுந்ததுதான் கடவுட் கொள்கை.

தமிழ்க்குடியினர் மிகப் பழங்காலந் தொட்டே, நெஞ்சம் தோய்ந்த சமயவாழ்க்கை வாழ்ந்து, கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். தாம் கண்ட கலைகள் அனைத்தையும், இசை கூத்து, ஒவியம், சிற்பம், இலக்கியம்) கடவுள் நெறியின் சார்பில் நின்று, வளர்த்து, வளம்படுத்தி, இறையருட்பணிக்கே