பக்கம்:அரை மனிதன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அரை மனிதன்



முறையில் நான் அவளை விரும்பியது இல்லை. அவளும் என்னை விரும்பியது இல்லை."

"யார் யாரோ எப்படி எப்படியோ கதை கட்டி இருப்பார்கள். காதல் புகுத்தாவிட்டால் கதையே அமைக்க முடியாது. அது உண்மைதான். இப்பொழுது அவளுக்குக் காதலை வைத்திருக்கிறேன். இனிமேல்தான் கதையே முடியப் போகிறது" என்றேன் நான்.

அது நல்ல காவல் நிலையம். பண்பட்ட போலீசுக்காரர்கள் இருந்தார்கள். எங்களைப் பேசவிட்டார்கள். அவர்கள் அதில் தலையிடாமல் இருந்தார்கள். இப்பொழுது நாடு இந்த வகையில் மிகவும் முன்னேறுகிறது என்பதைக் கண்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

குற்றவாளிகள் என்றால் ஒதுக்கப்படுகிறவர்கள். அவர்கள் அவமானத்துக்கு ஆளாக வேண்டியவர்கள் என்ற தவறான கருத்து எப்படியோ உருவாகிவிட்டது. அவர்கள் தண்டிக்கத் தக்கவர்கள்; ஆனால் அவமானத்துக்கு உள்ளாக வேண்டியவர்கள் அல்ல.

பிரபலஸ்தர்கள் கையில் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்ற செய்தியைப் பிரபலப்படுத்தினார்கள். அது தண்டனை அல்ல. அவமானத்துக்கு உள்ளாக்குவது. ஒடிவிடக் கூடிய வாய்ப்பு இருந்தால் கையில் அல்ல காலில் விலங்கிடலாம். அவமானப் படுத்துவதற்காக விலங்கிடப்படுவது அவ்வளவு நாகரிகமாகப் படவில்லை. என்னைப் பொறுத்தவரை என் கால்களுக்கு விலங்கு தேவை இல்லை. அந்த வகையில் நான் கவுரவமாகத்தான் நடத்தப் பட்டேன். அதற்கு என் இல்லாத கால் உதவியது. அதைத்தான் வாழ்த்தினேன்.

அம்மா அவள் கதையைக் கேட்டாள். ஆனால் முழுக் கதையைச் சொல்லவில்லை. அவர்களுக்கு வேண்டிய அளவுதான் சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/106&oldid=1462003" இலிருந்து மீள்விக்கப்பட்டது